--- --:--:-- --

சூர்யாவின் கருப்பு திரைப்படத்திற்கு கடைசி நேரத்தில் எழுந்த சிக்கல்

2

சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் இன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் தற்போது காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ளது கருப்பு திரைப்படம். இதில், திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு, நட்டி, சுவாசிகா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதற்கேற்ப இன்றைக்கும் நாளைக்கும் 2 நாட்களுக்கு காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஜஸ்வந்த் பண்டாரி என்பவருக்கு தயாரிப்பு நிறுவனம் பணம் கொடுக்க வேண்டியிருப்பதால், இதனை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, இன்று வெளியாக வேண்டிய கருப்பு திரைப்படம், நாளை வெளியாகலாம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்றைய காட்சிகளுக்கான முன்பதிவையும் திரையரங்கு உரிமையாளர்கள் நிறுத்திவைத்தனர்.

 

இந்த நிலையில் தான் கருப்பு திரைப்படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தவிர்க்க முடியாத காரணங்களால், ‘கருப்பு’ திரைப்படத்தின் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்.

 

 

முன்னதாக இயக்குநர் ஆர்ஜே பாலாஜி நேற்றிரவு வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “அன்பான ரசிகர்களே, தற்போதைய சூழ்நிலைக்கு என்னிடம் உறுதியான பதில் இல்லை. தடைகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் படத்துக்கு எப்பொழுதும் தடைகள் உண்டு, எப்படியோ கடவுள் அதையெல்லாம் கடந்து 32 மாதங்களுக்குப் பிறகு இங்கே இருக்கிறோம். இந்த முறையும் அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான். கருப்பு நாளைக்கு காலைல செமயா ரிலீஸ் ஆகும்..!!! நம்பிக்கை வைக்க, நடக்கும்…!” என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon