திமுக சாதனைகளைச் சொல்லி அமைச்சர் சாமிநாதன் பிரசாரம்!
கிராமங்களில் பிரசாரம் செய்ய வந்த அமைச்சர் சாமிநாதனுக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது.
காங்கேயம்: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தனது சொந்தத் தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களாக குண்டடம் மற்றும் சென்னிமலை ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு குக்கிராமங்கள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் அவர் மேற்கொண்ட சூறாவளிப் பிரச்சாரம், தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இன்று வியாழக்கிழமை, குண்டடம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் சாமிநாதன் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். சுண்ணாம்புமேடு பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குக் கேட்டுத் தொடங்கிய அவரது பயணம், மாலைக்காட்டுபுதூர், புதுப்பாளையம் மற்றும் கேகேஎஸ் நகர் குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்தது.
அங்கிருந்த பொதுமக்களிடம் திமுக அரசின் கடந்த கால சாதனைகளைத் தத்ரூபமாக விளக்கிக் கூறிய அமைச்சர், குறிப்பாகப் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து குள்ளம்பாளையம் பகுதியில் அவர் வாக்குச் சேகரித்தபோது, அப்பகுதி மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.
வெயிலையும் பொருட்படுத்தாமல், கருக்கம்பாளையம், செங்கோடம்பாளையம் மற்றும் அப்பியாபாளையம் பகுதிகளில் தனது பிரச்சாரத்தை அமைச்சர் முன்னெடுத்தார். அங்குள்ள விவசாயிகளிடம் பேசிய அவர், விவசாயிகளின் நலனுக்காகத் திமுக அரசு கொண்டு வந்த தனி பட்ஜெட் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து விவரித்தார்.
சமத்துவபுரம், ஊதியூர், தாயம்பாளையம் மற்றும் வட்டமலைபாளையம் குடியிருப்புப் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்த அவர், அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். ஒவ்வொரு இடத்திலும் முதியவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கைகுலுக்கி, உதயசூரியன் சின்னத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




