--- --:--:-- --

கலைஞரைப் பற்றிப் பேச பழனிசாமிக்கு எந்தத் தகுதியும் கிடையாது – மு.க.ஸ்டாலின்

7

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், தன் உயிர் நிகர் தலைவர் கலைஞரைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த யோக்கியதையும் கிடையாது என ஆவேசமாகத் தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், கருணாநிதியை மு.க.ஸ்டாலின் வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சரின் இந்தப் பேச்சு அமைந்தது.

 

தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி எல்லை மீறிப் பேசத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைவர் கலைஞர் ஒரு சிங்கம் என்றும், வாழ்ந்த காலம் வரை கோடிக்கணக்கான தொண்டர்களைத் தனது அன்பால் கட்டிப்போட்டிருந்த அவரை யாராலும் சிறை வைக்க முடியாது என்றும் முழங்கினார். முதுமையால் அவர் ஓய்வெடுத்தபோது கூட ‘அண்ணா அண்ணா’ என்று சொல்லிக்கொண்டிருந்தவர் என்றும், எங்களைப் போன்ற உடன்பிறப்புகளின் இதயச் சிறையில்தான் அவர் குடியிருந்தார் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தன் தந்தைக்கு அண்ணா சமாதி அருகே இடம் கேட்டுத் தான் நேரில் வந்து நின்றபோது கூட இரக்கமில்லாமல் மறுத்த பழனிசாமிக்கு, தங்கள் தலைவரைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை என அவர் சாடினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், பழனிசாமி துரோகத்தின் மொத்த உருவம் என்றும், தன்னை நம்பிப் பதவி கொடுத்த சசிகலா, ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி தினகரன் என அனைவரையும் முதுகில் குத்தியவர் என்றும் விமர்சித்தார். தற்போது பா.ஜ.க-வின் ‘டப்பா எஞ்சின்’ ஆட்சியைத் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர பழனிசாமி ஜால்ரா போட்டுக் கொண்டிருப்பதாகவும், சிறுபான்மையினருக்கு எதிரான பா.ஜ.க-வுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் அவரை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை ‘சூப்பர் ஸ்டார்’ என வர்ணித்த அவர், அடுத்த அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இல்லத்தரசிகளுக்கு 8,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வாங்கும் வகையில் ‘கூப்பன் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அதிரடி வாக்குறுதிகளை அளித்தார்.

 

மேலும், காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும், முதியோர் உதவித்தொகை 2,000 ரூபாயாகவும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று அவர் தெரிவித்தார். விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 3,500 ரூபாயாகவும், கரும்பு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீடற்ற ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். பொருநை அருங்காட்சியகம், தாமிரபரணி – நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் போன்ற சாதனைகளைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், பாளையங்கோட்டை எப்போதுமே தி.மு.க-வின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

 

Leave a Reply

Right Menu Icon