--- --:--:-- --

ஆர்டர்லி புகார்கள் மீது மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

8

தமிழக காவல் துறையில் நீண்ட காலமாகத் தொடரும் ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. உயர் அதிகாரிகள் தங்கள் இல்லப் பணிகளுக்காகக் காவலர்களைப் பயன்படுத்துவதை எதிர்த்து நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

 

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.குரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. விசாரணையின் போது, தமிழக அரசுத் தரப்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதில், தமிழகத்தில் ஆர்டர்லி முறையை முற்றிலும் ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாகக் காவல் அதிகாரிகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த நடைமுறையை முழுமையாகக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்களை வழங்கினர். அதன்படி, ஆர்டர்லி முறை தொடர்பாகப் புகார்கள் எழும் பட்சத்தில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாகத் தலையிட்டு விசாரணை நடத்தி விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரிகள் ஒருவருக்கொருவர் துணையாக நின்று செயல்பட்டால், அது கடுமையான குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். ஒருவேளை ஆர்டர்லி ஒழிப்பு கொள்கையை முறையாகச் செயல்படுத்தத் தவறினால், மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமல்லாது, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீதும் பணி விதிகளின் கீழ் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon