--- --:--:-- --

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல்..!

5

மிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

 

இந்நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான 15 அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு சென்னை வந்துள்ளது.
நேற்று முன்தினம் புதுச்சேரியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பின், நேற்று சென்னை வந்த இந்த குழு, எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஆலோசனைக் கூட்டங்களை மேற்கொண்டனர்.

 

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையக் குழுவினர் விரிவான ஆலோசனை நடத்தினர். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் பறக்கும் படை உள்ளிட்ட முக்கியமான பணிகளில் மாநில அரசு ஊழியர்களுக்குப் பதிலாக மத்திய அரசு ஊழியர்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறினார்.

 

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.வி. தங்கபாலு தெரிவித்தார். நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும், தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டதாக கராத்தே தியாகராஜன் கூறினார். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின.

 

அரசியல் கட்சிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கண்டறிவது குறித்து விவாதிக்கப்பட்டது.

 

தொடர்ந்து, இன்று காலை, வருமான வரித்துறை, வங்கி, விமானப் போக்குவரத்து, ரயில்வே உள்ளிட்ட 20 முக்கியத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடைபெறவுள்ளன. பணப்பட்டுவாடா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon