விளம்பரம் தேடும் செயலில் மட்டும் தமிழக அரசு ஈடுபடுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இ.பி.எஸ் கண்டனம்
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவர வலியுறுத்தியது தி.மு.க என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னதை தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் அமலியில் ஈடுபட்டதால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
முதல் நாளில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்தார். பிப்ரவரி 20-ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்று காலையில் தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரின் 2-வது நாளில், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்றது.
அப்போது சட்டப்பேரவையில் பேசிய மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன் பேசியபோது, அ.தி.மு.க. ஆட்சியின்போது, மருத்துவத்துறையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மசோதாகவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் தி.மு.க.வின் போராட்டம் காரணமாகவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த பேச்சு, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மா.சுப்பிரமணியன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்கிறார்.
மருத்துவம் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு தொடர்பாக திமுகவினர் பேசிய ஏதாவது ஓர் ஆதாரத்தை காட்ட முடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையிலும், அரசியலமைப்பு விதியை பயன்படுத்தி அரசாணை பிறப்பித்து 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது அ.தி.மு.க. தான் . நீட் தேர்தவை தி.மு.க. அரசால் ரத்து செய்ய முடிந்ததா? நீட் விவகாரத்தில் தி.மு.க சாதித்தது என்ன” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், அ.தி.மு.க, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சினாலும்தான் தமிழ்நாடு 11.19 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் மட்டுமே உற்பத்தி அதிகம் எனக் கூறுவது தவறு. தொடர்ந்து, விளம்பரம் தேடும் செயலில் மட்டுமே தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. நாங்கள் செய்ததை வைத்துகூட விளம்பரம் தேடிக்கொண்டது இல்லை என்று கடுமையாக விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




