ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு..!
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்று, இரண்டு 2025 நவம்பர் மாதம் எழுதிய 4 லட்சத்து 25 ஆயிரம் பேரின் தேர்வு முடிவுகளை குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இடைநிலை , பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்வில் தகுதி பெறுவதன் மூலம், மாநில பாடத்திட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் பிற துறை பள்ளிகளில் பணியில் சேர்வதற்கு நடத்தப்படும் போட்டித் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி அடிப்படையில் தகுதி பெறுவார்கள்.
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு 2025 செப்டம்பர் மாதம் விண்ணப்பம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வு 2025-க்கான தாள் 1, 367 மையங்களில் நவம்பர் 15 ந் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை 92 ஆயிரத்து 412 பேர் தேர்வு எழுதினர் அதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் II 2025 நவம்பர் 16 நடைபெற்றது. இந்தத் தேர்வினை 3,31,923 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு பெறுவதற்கும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்தது. தகுதித் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் தகுதித் தேர்வு இது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிப் பெறுவதற்கான மதிப்பெண்களை குறைத்து ஜனவரி 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின் படி நவம்பர் 15,16 ஆகியத் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறைந்தப் பட்ச தகுதி மதிப்பெண்களை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுப் பிரிவினருக்கு 60 சதவீதம் அல்லது 90 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம், சீர்மரபினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதம் அல்லது 75 மதிப்பெண்கள், எஸ்சி, எஸ்சி அருந்ததியர், பழங்குடியினர் பிரிவினருக்கு 40 சதவீதம் அல்லது 60 மதிப்பெண்கள் என 150 மதிப்பெண்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி ஏற்கனவே 2025 நவம்பர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி உள்ளவர்களுக்கும் மதிப்பெண் குறைத்து கணக்கிடப்படும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.






