49 தொகுதிகள் குறி… 11 பொறுப்பாளர்கள் நியமனம்..!
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக-விற்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், 49 சட்டமன்றத் தொகுதிகளை குறி வைத்து, பாஜகவின் முக்கியத் தலைவர்களின் பரப்புரைப் பயணத்திட்டத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, உதகை, திருப்பூர் வடக்கு, திருப்பரங்குன்றம், ராதாபுரம் மற்றும் வால்பாறை தனித்தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதே போன்று, விருகம்பாக்கம், மதுரை தெற்கு, சிங்காநல்லூர், ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம், காரைக்குடி ஆகிய தொகுதிகளில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரப்புரை செய்கிறார்.
மேட்டுப்பாளையம், பழனி, தென்காசி மற்றும் பரமக்குடி தனித்தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர், கும்மிடிப்பூண்டி, நாங்குநேரி, கிள்ளியூர், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவரது சொந்த தொகுதியுடன் சேர்த்து திருப்பூர் தெற்கு மற்றும் குன்னூரில் பரப்புரை செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், முதுகுளத்தூர், விளவங்கோடு, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளில் ஹெச்.ராஜா பரப்புரை பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
தியாகராய நகர், வேலூர், ஓசூர், பட்டுக்கோட்டை, ராஜபாளையம், நாகர்கோவில், கிணத்துக்கடவு ஆகிய 7 தொகுதிகளில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பரப்புரை செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தமிழ்நாடு பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, வேளச்சேரி, விக்கிரவாண்டி, மதுரை வடக்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், தளி, குளச்சல் ஆகிய தொகுதிகளில் பரப்புரை பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
எழும்பூர் மற்றும் ராசிபுரம் தனித்தொகுதிகள், ஆவடி, ஆம்பூர், உளுந்தூர்பேட்டை, கலசப்பாக்கம், பரமத்தி வேலூர், குன்னம் ஆகிய தொகுதிகளையும் குறி வைத்து பாஜக பிரமுகர்கள் பரப்புரை மேற்கொள்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




