விஜய்- ராமதாஸ் கூட்டு? கோட்டைக்கு குறிக்கும் பாமக தரப்பு! கிளம்பும் புதிய கூட்டணியால் பரபரப்பு
சட்டமன்றத் தேர்தலில், திக்குத் தெரியாத காட்டில் தவித்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ், திடீர் திருப்பமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டு சேர, பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கோட்டையன் முன்னின்று பேச்சு நடத்துவதாக கூறப்படும் நிலையில், ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ. அருளும் இதை உறுதி செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தினம் ஒரு பரபரப்பு அரங்கேறி வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்னும் மகாபாரதப் போருக்கு, இப்போதே வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம் ஆளுங்கட்சியான திமுக தனது கோட்டையைத் தக்கவைக்கத் துடிக்கிறது. மறுபுறம், பாஜகவின் ஆசியுடன் அதிமுக மீண்டும் தன் பழைய பலத்தைக் காட்டப் புறப்பட்டுவிட்டது.

எடப்பாடி பழனிசாமியின் பக்கம் அன்புமணி தலைமையிலான பாமக, டி.டி.வி. தினகரன், தமாகா என்று பட்டாளமே அணிவகுக்க, விரைவில் ஓ.பன்னீர்செல்வமும் ‘தாய் வீட்டிற்கு’த் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெகா கூட்டணிப் போட்டிகளுக்கு மத்தியில், ‘திக்குத் தெரியாத காட்டில்’ நிற்பது போலத் தவித்துக் கொண்டிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
சமீபகாலமாகப் பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவு அந்த கட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டங்காண வைத்திருக்கிறது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி அதிமுகவோடு ஐக்கியமாகிவிட, கட்சியின் சீனியர் ராமதாஸோ எங்கு செல்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார். வழக்கமாக திமுக அல்லது அதிமுக என ஏதோ ஒரு பெரிய நிழலில் ஒதுங்கும் பாமகவுக்கு, இந்த முறை இரண்டு பக்கமுமே கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன.

திமுக பக்கம் எட்டிப்பார்க்க நினைத்தாலும், அங்கு திருமாவளவன் ‘வேலி’ போட்டு நிற்கிறார். “பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது” என்று அவர் அடித்துச் சொன்னது, திமுக தலைமையைக் குழப்பத்திலும் ராமதாஸ் ஆழ்த்தியுள்ளது. இப்படி ஒரு நெருக்கடியான சூழலில், ‘கடை விரித்தும் கொள்வாரில்லையே’ என்ற ஏக்கத்தில் ராமதாஸ் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
வரும் தேர்தலில் ஒரு கணிசமான இடங்களைப் பிடிக்கவில்லை என்றால், அது தனது அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். குறிப்பாக, அன்புமணி தரப்புக்கு இது கூடுதல் பலமாக அமைந்துவிடும் என்ற அச்சமும் ராமதாஸிடம் உண்டு. எனவேதான், எப்படியாவது ஒரு கூட்டணியை அமைத்து, குறைந்தது 5-6 தொகுதிகளிலாவது வென்றே தீரவேண்டும் என்று அவர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்.
இந்தச் சூழலில்தான், தமிழக அரசியல் வானில் புதிய வரவான ‘தமிழக வெற்றிக் கழகம்’ ராமதாஸின் கண்களுக்குத் தென்பட்டிருக்கிறது. “ஆட்சியில் பங்கு” என்று மேடைக்கு மேடை முழங்கும் விஜய்க்கும், தற்போது ஒரு பலமான கூட்டணிக் கட்சி தேவைப்படுகிறது. தவெகவின் அழைப்பை ஏற்று இதுவரை பெரிய கட்சிகள் எதுவும் முன்வராதது விஜய் தரப்புக்கே சற்று அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேவையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த ராமதாஸ், தனது இரண்டாம் கட்டத் தலைவர்கள் மூலம் தவெகவுக்குத் தூது விட்டுள்ளார்.

இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் என்னவென்றால், அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இதில் மத்தியஸ்தராகச் செயல்படுவதுதான். ராமதாஸ் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தவெக பக்கம் வந்தால் மட்டுமே கட்சிக்கு ஒரு முதிர்ச்சி கிடைக்கும் என்று அவர் யோசனை கூறியதாகத் தெரிகிறது. அவரே முன்னின்று இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் தரப்பு பாமக எம்.எல்.ஏ. அருளின் பேச்சும் இதை உறுதிப்படுத்துவது போலவே இருந்தது. “அரசியலில் எதுவும் நடக்கலாம். விஜய்யைச் சுற்றி இளைஞர்கள் தேனீக்களைப் போல மொய்க்கிறார்கள். மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்தால் அவர் முதல்வராவதைத் தடுக்க யாரால் முடியும்?. தவெகவுடனும் பேசி வருகிறோம்” என்று கூறியது, தவெகவுடனான நெருக்கத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. தவெகவுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதையும் அவர் சூசகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ராமதாஸின் தற்போதைய அரசியல் கணக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது. தவெகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால், ஆட்சியிலும் பங்கு கிடைக்கும். அதன் மூலம் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து, அன்புமணி தரப்பிடம் இருந்து கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துவிடலாம் என்பதுதான் அந்த மாஸ்டர் பிளான்.
ஆனால், விஜய்யின் “ஆட்சியில் பங்கு” என்ற வாக்குறுதி உண்மையிலேயே ராமதாஸைக் கரையேற்றுமா? அல்லது விஜய்யின் அறிமுகத் தேர்தல் சோதனையில் ராமதாஸ் பலிகடா ஆவாரா? தமிழக அரசியலில் “அதிமுக – திமுக” என்ற இரண்டு துருவங்களைத் தாண்டி, மூன்றாவது ஒரு முனை உருவாகுமா அல்லது இதுவும் ஒரு கானல் நீராகப் போகுமா என்பது 2026-ல் தான் தெரியும்.
எது எப்படியோ, தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த ராமதாஸ் – விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை, தமிழக அரசியலில் ஒரு புதிய புயலைக் கிளப்பியிருப்பது மட்டும் உறுதி. கோட்டை நோக்கிய இந்தப் பயணத்தில் ‘தளபதி’யும் ‘ஐயா’வும் கைகோர்ப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!





