--- --:--:-- --

கடலூர் கடலில் 3 நாட்களாக மிதக்கும் 2 நிர்வாணப் பிணங்கள்!

4

டலூர் முதுநகர் காவல் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக இரண்டு ஆண்களின் சடலங்கள் நிர்வாண நிலையில் மிதந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், எல்லைப் பிரச்சினை காரணமாக போலீசார் உடல்களை மீட்கத் தயக்கம் காட்டி வருவது சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் துறைமுகம் சிங்காரத்தோப்பில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு ஆண் பிணமும், சித்திரைப்பேட்டைக்கு அருகே அரை கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு ஆண் பிணமும் ஆடையின்றி மிதப்பதை மீனவர்கள் கண்டறிந்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும், கடந்த மூன்று நாட்களாக உடல்கள் மீட்கப்படாமல் கடலிலேயே மிதக்கின்றன.

 

இந்த விவகாரத்தில் போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்காமல் இருப்பதற்கு வினோதமான காரணத்தைக் கூறுகின்றனர்: கடலில் மிதக்கும் உடல்களை மீட்டு கரைக்குக் கொண்டு வரும் போலீசாரே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த உடல்கள் எந்த மீனவக் கிராமத்தில் கரை ஒதுங்குகிறதோ, அந்தப் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தினர் மட்டுமே உடல்களை மீட்டு விசாரணை நடத்துவார்கள் என போலீசார் காத்திருக்கின்றனர்.

 

நிர்வாண நிலையில் சடலங்கள் இருப்பதால், இது துப்பு துலக்க கடினமான வழக்காக இருக்கலாம் என்ற தயக்கமும் அவர்களிடம் உள்ளது. இதற்கிடையே, புதுச்சேரியில் காணாமல் போன ஒருவரைத் தேடி வந்த புதுச்சேரி போலீசார், தகவலறிந்து படகில் சென்று உடல்களைப் பார்த்தனர். ஆனால், இறந்து கிடப்பவர்கள் அவர்கள் தேடும் நபர் இல்லை என்பது தெரிந்ததும் அவர்களும் உடல்களை மீட்காமல் திரும்பிச் சென்றுவிட்டனர்.

 

“நிர்வாண நிலையில் உடல்கள் மிதப்பதால் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எல்லைப் பிரச்சினையைப் பார்க்காமல், மனிதநேய அடிப்படையில் சடலங்களை உடனடியாக மீட்டு, அவர்கள் யார்? எப்படி இறந்தார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும்” என்பதே அப்பகுதி மீனவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Right Menu Icon