சிதம்பரம் அண்ணாமலை பல்.த்தில் ஓய்வூதியம் வழங்கப்படாததை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்!
சிதம்பரம்: நீண்டகாலமாகக் கிடப்பில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் இன்று (ஜனவரி 22) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் அருகே இன்று காலை இந்தப் போராட்டம் தொடங்கியது. ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அ.ரவி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் மாதவன் போராட்டத்தைத் துவக்கி வைத்து, கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முன்வைக்கும் பிரதான கோரிக்கைகள் வருமாறு:பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் என்.எம்.ஆர் (NMR) தொகுப்பூதியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கடந்த 14 மாதங்களாக ஓய்வூதியர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படாததைச் சுட்டிக்காட்டி கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற பின்னரும் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள கம்யூட்டேசன் (Commutation), இ.எல் சரண்டர் ஒப்புவிப்புத் தொகைகள் மற்றும் பணிக்கொடை (Gratuity) போன்றவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். காலை தொடங்கிய இந்தப் போராட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது. முறையான தீர்வை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிக்கும் வரை போராட்டங்களைத் தொடரப் போவதாகக் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.






