ஸ்டாலின் ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது.. தேர்தலில் ஸ்ரீகாந்தி போட்டியிடுவார் – ராமதாஸ்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாமக தயாராகி வரும் நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் இன்று காலை முதல் விருப்ப மனுக்கள் பெறும் பணி தொடங்கியது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினர் ஆர்வத்துடன் மனுக்களை அளித்தனர்.
பாமகவின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி தனது விருப்ப மனுவை மருத்துவர் ராமதாஸிடம் வழங்கித் தொடக்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், வரவிருக்கும் தேர்தலில் ஸ்ரீகாந்தி அவர்கள் பாமக சார்பில் போட்டியிடுவார் என்பதை ராமதாஸ் உறுதிப்படுத்தினார். தேவைப்பட்டால் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்குத் தனது பாணியில் பதிலளித்த ராமதாஸ், “நாங்கள் இங்கு (தமிழகத்தில்) கேட்க மாட்டோம், அமெரிக்க அதிபரிடம் கேட்போம்” என்று கிண்டலாகப் பதிலளித்தார். தொடர்ந்து இது குறித்துப் பேசிய அவர், “கடந்த காலங்களில் ஆட்சியில் பங்கு கேட்கும் வாய்ப்பு இருந்தபோதும் நாங்கள் அதனை வேண்டாம் என்றே கூறினோம். கலைஞர் ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தோம். அப்போது காங்கிரஸிற்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற விருப்பம் இருந்தது, ஆனால் எனக்கு அந்த விருப்பம் இல்லை” என்று நினைவுகூர்ந்தார்.
கூட்டணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தற்போது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றார். “எடப்பாடி பழனிசாமி ஏன் அன்புமணி ராமதாஸை அழைத்தார் என்று எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்” என்று சிரித்தபடி பதிலளித்தார்.
விசிக தலைவர் திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “அரசியலில் எதுவும் வேண்டுமானாலும்; என்ன வேண்டுமானாலும் நடக்கும்; எதிர்பார்க்காதவை கூட நடக்கும்; எதுவும் நடக்காது” என்று சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தவெக உடன் கூட்டணியா?” என்ற கேள்விக்கு, “உங்கள் கற்பனைக்கு நான் தீனி போட முடியாது. காலமும் நேரமும் வரும்போது உங்களுக்குப் பதில் கிடைக்கும்” என்றார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நான்கு ஆண்டு கால ஆட்சி குறித்துப் பேசிய அவர், “நான்காண்டு கால ஸ்டாலின் ஆட்சி எல்லாம் நன்றாகத் தான் உள்ளது” என்று பாராட்டுத் தெரிவித்தார். மேலும், பாமகவின் சின்னம் தொடர்பாக அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், வரவிருக்கும் தேர்தலில் பாமக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.





