பாம்பை ஏவி தந்தையை கொலை செய்த மகன்கள்..!
திருத்தணி அருகே 3 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை மகன்களே பாம்பை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் வசித்து வந்த கணேசன், அரசு பள்ளியில் லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வந்தார். இவரது மகன்கள் மோகன்ராஜ் மற்றும் பிரவீன் குமார். கணேசன் பெயரில் பல்வேறு ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் மூன்று கோடி ரூபாய் இன்சூரன்ஸ் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை பாம்பு கடித்த நிலையில், அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் அவரது மகன்கள் இன்சூரன்ஸ் பணத்தை பெற காப்பீடு நிறுவனங்களை அணுகியுள்ளனர். அதில் சந்தேகமடைந்த சில நிறுவனங்கள் காவல்துறையில் புகாரளிக்க, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக தந்தையை மகன்கள் திட்டம் தீட்டி கொலை செய்தது அம்பலமானது. கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், பிரவீன் குமார் மற்றும் உறுதுணையாக செயல்பட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, இன்சூரன்ஸ் அலுவலகத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள் புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடத்தியதாகவும், அதில் மகன்கள் கொலை செய்தது அம்பலமாகியுள்ளதாகவும் தெரிவித்தார். சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று பார்த்த போது தந்தையை கொன்ற பாம்பை அவர்களே கொலை செய்து நாடகமாடியதால் அவர் பாம்பு கடித்து உயிரிழந்ததாகவே தெரிந்தது என்றும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




