பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு..!
திருப்பூரில் இருந்து காரைக்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அதே போல காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மற்றொரு அரசு பேருந்தும் அதே வழியில் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் இந்த இரண்டு பேருந்துகளும் பிள்ளையார்பட்டி அருகே எதிர்பாராத விதமாக திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் டிரைவர் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த பயணிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.





