டிட்வா புயலால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பா..?
டிட்வா புயல் இலங்கையை மொத்தமாக புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அதி கன மழை, வெள்ளம், நிலச்சரிவு என இலங்கை மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இது மேலும், வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை மறுதினம் வடதமிழ்நாட்டை நெருங்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும், வடதமிழ்நாட்டிலும் மழை பொழிவு, புயல் காற்று உள்ளிட்டவை எப்படி இருக்கும் என பொதுவான கேள்விகள் எழுந்துவருகிறது. இவற்றுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதில் கொடுத்துள்ளார்.
பொதுமக்களுக்கு எழும் சில பொதுவான கேள்விகளுக்கு பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி – பதிலாக விளக்கம் கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் டிட்வா புயல் பலவீனமடைந்து, சென்னைக்கு மழையில்லாமல் போய்விடுமா? புயல் இப்போது இலங்கையில் நிலத்தின் மீது வீசுகிறது. அது கடல்களுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது சென்னையை நெருங்கும்போது சூறாவளியாக இருக்காது. மேலும் அது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ இருக்கும். தொடக்கத்திலிருந்தே இது தானே, கஜா அல்லது வர்தா போன்ற காற்று வீசும் புயலாக இல்லை.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் எப்போதிலிருந்து மழை இருக்கும்? 30ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் நல்ல மழை இருக்கும். சில இடங்களில் 29ஆம் தேதியிலிருந்தே மழை பொழிவு இருக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் சூறாவளி காற்று வீசுமா? வர்தா புயல் மணிக்கு 120 கிலோ மீட்டரிலும், கஜா புயல் மணிக்கு 140 கிலோ மீட்டரிலும், தானே புயல் மணிக்கு 150 கிலோ மீட்டரிலும் சூறாவளி காற்று வீசியது. ஆனால், டிட்வா வடதமிழகம் வரும்போது வலுவிழந்து வருவதால் மணிக்கு அதிகப்பட்சமாக 50 முதல் 60 கிலோ மீட்டரில் தான் காற்று வீசும்.
டெல்டா மற்றும் மற்ற மாவட்டங்களில் எப்படி இருக்கும்? டிட்வா வரும் 29ஆம் தேதி ஜாஃப்னா அருகே கடலில் நகரும்போது அது மீண்டும் கொஞ்சம் வலுகூட செய்யும். அந்த நாளில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கன மழை இருக்கும். இதன் அருகே இருக்கும் மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை இருக்கும். டிட்வா இன்னும் நகரும்போது, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் இதன் அருகிலுள்ள சேலம், நாமக்கல் போன்ற இடங்களிலும் மழை பெய்யும்.
மிக்ஜாம் புயல் போல் மழை பொழிவு இருக்குமா? மிக்ஜாம் புயலின்போது 24 மணி நேரத்தில் சென்னை 400 மில்லிமீட்டர் மழையை பெற்றது. இந்த டிட்வா புயலில் அப்படியான மழை பொழிவு இருக்காது. டிசம்பர் 1 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை இருக்குமா? சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் 29 அல்லது 30 ஆம் தேதிகளில் மழை தொடங்கும், அதிர்ஷ்டவசமாக டிசம்பர் 1 ஆம் தேதி வரை மழை பெய்யும். பெரும்பாலான இடங்களில் 150 மிமீக்கு மேல் பதிவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






