கலைஞர் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் – முதல்வர் பெருமிதம்
கோவை மக்கள் 15 ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கும் உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்காவை இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். செந்தமிழ்க்கு ’செம்மொழி’ எனும் பெருமை கிடைத்ததை கொண்டாடும் வகையில், கோவையில் ’செம்மொழிப் பூங்கா’ அமைக்கப்படும் என 2010ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய நடைபாதை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் 165 ஏக்கரில் ’செம்மொழிப் பூங்கா’ அமைக்கப்படும் என 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதன்படி, 2023ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய முதல்வர், முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்க சுமார் 208 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.
உலகத்தரம் வாய்ந்த இப்பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த்தோட்டம், மணம்கமிழ் தோட்டம், மூங்கில் தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகளுடன் ரோஜா தோட்டம் செம்மொழிப் பூங்காவிற்கு மணம் சேர்த்துள்ளது.
இப்பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. திறந்தவெளி அரங்கு, உணவகம், ஒப்பனை அறை, செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களும் உள்ளன. கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தலைவரும் தந்தையுமான கலைஞர் அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றிவிட்டேன்.
அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி, குறித்த காலத்தில் கோவை செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். நகரின் மையப் பகுதியில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டு இருப்பதை சூழலியல் ஆர்வலர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.





