--- --:--:-- --

3 வேளாண் சட்டங்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு? – எடப்பாடி பழனிசாமி

4

ன்று விவசாயிகள் இந்த அரசு மீது கொந்தளிப்புடன் இருப்பதால், ஸ்டாலின் என்னைப் பற்றி ட்விட் செய்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “மாநில அரசு அனுப்பும் பட்டியலில் இருந்து மூவரை தேர்ந்தெடுத்து மத்திய தேர்வாணையம் மீண்டும் மாநில அரசுக்கு அனுப்பும்.

 

அதில் இருந்து ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால், பொறுப்பு டிஜிபி நியமித்த பின் ஒருவர் உயர்நீதிமன்றம் செல்கிறார். அதன் பிறகே மாநில அரசு பட்டியலை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்புகிறது. மத்திய தேர்வாணையம் அனுப்பிய பின்னும் நிரந்தர டிஜிபியை மாநில அரசு நியமிக்கவில்லை. தமிழக டிஜிபியை நியமிப்பதில் அரசுக்கு ஏன் தடுமாற்றம்? தேர்வு செய்யப்பட்டுள்ள மூவரும் இவர்களுக்கு கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் எனக் கருதிதான் டிஜிபி நியமனத்தில் அரசு காலதாமதம் செய்கிறது.

 

அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டதும், அதனை கொள்முதல் செய்திருந்தால் தொடர் மழையில் நனைந்து நெல் மணி முளைக்கும் பிரச்சனையே இருந்திருக்காது. ஆனால், இந்த அரசு கொள்முதல் செய்யவில்லை. 15 நாளாக கொள்முதல் செய்யவில்லை என்றும், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் குடோனுக்கு கொண்டு செல்லவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது எதிர்க்கட்சி தலைவரான நான் நேரடியாக அங்குச் சென்று அவர்களைச் சந்தித்தேன். ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திரைப்படம் பார்க்க சென்றுவிட்டார். மழையில் பயிர்கள் மூழ்கி அழுகியபோது, அதனை அலுவலகத்திற்கு கொண்டுவரச் சொல்லி பார்வையிட்டவர் முதலமைச்சர் ஸ்டாலின்.

 

ஏன் தனி விமானம் மூலம், திருச்சி சென்று டெல்டா மாவட்டங்களுக்கு சென்று நேரடியாக பார்வையிட முடியாதா? தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சராக இருந்தபோதுதான் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட துணை நின்றவர். நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் மத்திய அரசிடம் போராடி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக மாற்றினேன்.

50 ஆண்டு காலமாக இருந்த காவிரி நதி நீர் பிரச்சனையை தீர்த்து ஆண்டுதோறும் அவர்களுக்கு உரிய நீரை பெற்றுக் கொடுத்தது அதிமுக அரசு. விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அதிமுக அரசு. இரண்டு முறை பயிர் கடனை தள்ளுபடி செய்தோம். இயற்கை பேரிடரில் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது அவர்களை நேரடியாக சென்று சந்தித்து, வறட்சியிலும், வறட்சி நிவாரண நிதி கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசுதான்.

 

இன்று விவசாயிகள் இந்த அரசு மீது கொந்தளிப்புடன் இருப்பதால், ஸ்டாலின் என்னைப் பற்றி ட்விட் செய்கிறார். துணை முதலமைச்சர் வேகவேகமாக டெல்டா மாவட்டத்திற்கு சென்றார். விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், ஏற்கனவே ரயில் மூலம் சென்றுக்கொண்டிருக்கும் நெல் மூட்டைகளை மீண்டும் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

 

மூன்று வேளாண் சட்டம் பற்றி முதலமைச்சருக்கு எதுவும் தெரியாது. அந்தச் சட்டங்களால், தமிழ்நாடு விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். வட மாநிலங்களில் இருந்தவர்கள் மண்டி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குதான் அது பாதிப்பு. 22% ஈரப்பத நெல் கொள்முதல் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததற்கான காரணத்தை வெளியே சொல்லவில்லை. மாநில அரசு போராடி பெற வேண்டியதை எதிர்க்கட்சிதான் போராடிக் கொண்டிருக்கிறது.

 

காவிரி நதி நீருக்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை நாங்கள் முடக்கினோம். நீட் பிரச்சனைக்காக நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறீர்களா? 39க்கும் 39 வென்றோம் என மார்தட்டிக்கொள்ளும் நீங்கள் என்றைக்காவது மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறீர்களா?

திமுகவுக்கு எஸ்.ஐ.ஆர். பணி நடைபெறக்கூடாது. இந்தப் பணி நடந்தால் இறந்தவர்கள் பெயர்கள், இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும், 20 முதல் 40 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால், அந்த வாக்குகள் எல்லாம் இருந்தால் தான் தேர்தல் சமயத்தில் இறந்தவர்கள் உயிர் பெற்று வந்து வாக்கு செலுத்த முடியும் என்பதற்காக திமுக எதிர்க்கிறது. உண்மையான வாக்காளர்கள் தான் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon