குரூப் 1 முதன்மை தேர்வர்களுக்கு அறிவுரை..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி I பணிகள்)இல் உள்ள பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு டிசம்பர் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் முற்பகலில் சென்னையில் மட்டும் 18 மையங்களில் நடத்தப்பட உள்ளது.
தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் (10 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் Videograph செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லா மையங்களிலும் ஜாமர் (Jammer) கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
தேர்வர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று, அதாவது 01.12.2025, 02.12.2025, 03.12.2025 மற்றும் 04.12.2025 முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
வினா விடைத்தாள் தொகுப்பில் கருமை நிற மை பேனாக்களைத் தவிர மற்ற நிற மை பேனாக்களை (Whitener, Sketch pens, Pencil, வண்ணப் பென்சில்கள், வண்ண மைப்பேனா, Crayons etc.,) உபயோகப்படுத்தக்கூடாது.
தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்; வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் விரிவாகப் படித்து முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனத்தையும் எடுத்துச் செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





