இந்திய கடல் பகுதிகளில் 3 சுழற்சிகள்..!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில் தற்போது உருவாக இருக்கும் புயல் குறித்தும் இதனால் தமிழகத்தில் மழைப்பொழிவு எப்படி இருக்கும் என்பது குறித்தும் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “வடகிழக்கு பருவமழை தமிழகம் புதுவையில் இயல்பை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. அதன்படி தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் 29 ஆம் தேதி வடகடலோர மாவட்டங்களாக இருக்கக்கூடிய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகக்கூடும். இதற்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்துள்ள சென்யார் என்ற பெயர் புயலுக்கு வைக்கப்பட உள்ளது.
நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இருக்கும்.
நாளை வானிலை படிவங்களை பொறுத்து கனமழையில் மாற்றம் இருக்கலாம். தமிழக கடலோர பகுதிகள், கேரளா கடலோர பகுதிகள், தென் அந்தமான் கடல் பகுதிகளுக்கு இன்று முதல் 29 ம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
சென்னை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சுழற்சி உடன் கூடிய நாட்களில் மழை அதிகமாக இருக்கும். அடுத்து வரும் நாட்களில் இயல்பை விட அதிகமாக மழை இருக்கும்.
இந்நிலையில், இந்திய கடல் பகுதிகளில் 3 சுழற்சிகள் நிலவுகின்றன. 3 சுழற்சிகளும் தொடர்பில் இருப்பதால் வானிலையில் மாற்றங்கள் நிகழ்ந்தபடி உள்ளன” என தென் மண்டல வானிலை மையத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.





