--- --:--:-- --

ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா..?

9

டெட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு குறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.

 

இதனிடையே ஜாக்டோ ஜியோ சங்கத் தலைவர் மாயவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்” என தான் நம்புவதாக தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் மாயவன் கூறினார்.

 

இதைத் தொடர்ந்து ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு தொடர்பாக பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர். 55க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

இதில், அரசு ஆசிரியர்களின் பணி பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்றும் சட்ட விதிமுறைகளின்படி தொடர்ந்து போராடுவோம் என்றும் அமைச்சர் அன்பில் தெரிவித்தார்.
இதில், அரசு ஆசிரியர்களின் பணி பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்றும் சட்ட விதிமுறைகளின்படி தொடர்ந்து போராடுவோம் என்றும் அமைச்சர் அன்பில் தெரிவித்தார்.

 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்தித்துப் பேசினார். அப்போது திமுக வழக்கறிஞரும் எம்.பி.யுமான வில்சன் உடன் இருந்தார்.

 

மேலும், அடுத்த மாதம் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon