--- --:--:-- --

பல மாநிலங்களில் தேடப்பட்ட மற்றொரு காரை கைப்பற்றிய காவல்துறை..!

1

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் கேட் 1 அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் 13 பேர் பலியாகியுள்ள நிலையில், 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையதாக காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் முஷாமில் கானேய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹித் என்பவர் கைது செய்யப்பட்டார். லால் பாக் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஷாஹீன் ஷாஹித்தின் காரில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

ஹியுண்டாய் ஐ-20 கார் இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது என்பது முதலில் தெரியவந்தது. மேலும், அந்தக் காரை, உமர் நபி என்பவர் ஓட்டி வந்திருக்கலாம் என்றும், அவரும் இந்த சம்பவத்தில் பலியாகியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக உமர் நபியின் தாயார் டி.என்.ஏ. மாதிரிகளை சேகரித்த விசாரணை அதிகாரிகள் அதனை சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

 

இந்நிலையில், உமர் நபியின் பெயரில் சிவப்பு நிற போர்டு ஈகோ ஸ்போர்ட் கார் இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும் அந்தக் கார் DL10CK0458 எனும் பதிவெண் கொண்டது என அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனை அடுத்து ஹரியானா உட்பட சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து இந்தக் காரை அதிகாரிகள் தேடிவந்தனர்.

 

இந்நிலையில் உமர் நபி பெயரில் இருக்கும் DL10CK0458 காரை ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் பகுதியில் உள்ள கண்டவாலி எனும் கிராமத்தின் அருகே இருக்கும் ஒரு பண்ணைவீட்டில் இந்தக் காரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்தப் பண்ணைவீடு உமர் நபியின் நண்பருக்கு சொந்தமானது என்றும், அவர் தற்போது காவல்துறையால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon