டெல்லி குண்டு வெடிப்பு – காரை ஓட்டியவரின் அடையாளம் தெரிந்தது
டெல்லியின் மையப்பகுதியில் செங்கோட்டை அமைந்துள்ளது. இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் பகுதி வழக்கம்போல நேற்று மாலை 6 மணியளவில் பரபரப்பாகக் காணப்பட்டது. அப்போது, மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒன்றாம் நுழைவாயில் அருகே உள்ள சாலையில் மாலை 6.52 மணிக்கு ’ரெட் சிக்னல்’ போடப்பட்டது.
ரெட் சிக்னலைக் கண்டதும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மெதுவாக நிறுத்தினர். ரெட் சிக்னல் காரணமாக, மெதுவாகச் சென்ற கார் ஒன்றும் நிறுத்தப்பட்டது. உடனே யாரும் எதிர்பாராத விதமாக, அந்த கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. பரபரப்பான நேரம் என்பதால் வெடித்து சிதறிய கார் அருகே ஏராளமான வாகனங்கள் இருந்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவில் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கார் வெடித்த உடனே மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. தீயானது அருகில் இருந்த மற்ற வாகனங்களிலும் பரவியது. கார் குண்டு வெடிப்பு சம்பவத்தால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அருகில் உள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் வெடித்து சிதறின.
இதனிடையே, டெல்லியில் கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை சீல் செய்து, காவல் துறை, என்.ஐ.ஏ., தேசிய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.குண்டு வெடிப்பு நடந்த ’Hyundai i20′ மாடல் கார், அரியானா மாநில பதிவெண் கொண்டது என்பதை விசாரணை அமைப்புகள் உறுதி செய்துள்ளன. ’HR 26 CE 7674’ என்ற பதிவெண் கொண்ட அந்த காரின் முன்னாள் உரிமையாளர் அரியானாவைச் சேர்ந்த முகமது சல்மான் என்பது தெரியவர அவரை கைது செய்தனர்.
விசாரணையில், டெல்லியில் உள்ள ஓக்லா பகுதியைச் சேர்ந்த தேவேந்தர் என்பவரிடம் அந்த காரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விற்பனை செய்ததாக முகமது சல்மான் தெரிவித்தார். அந்த காரின் தற்போதைய உரிமையாளர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா அருகே உள்ள ஷம்புரா கிராமத்தைச் சேர்ந்த தாரிக் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டமான ’உபா’ சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, டெல்லி கார் குண்டு வெடித்தபோது காரை ஓட்டிவந்தவரின் அடையாளம் தெரிந்தது. குண்டு வெடிப்பிற்கு அரைமணி நேரம் முன்னதாக சுங்கச்சாவடியை கார் கடந்து சென்றது தெரியவந்தது. காரை ஓட்டி வந்தவரின் புகைப்படத்தை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. உமர் என்று அழைக்கப்படக்கூடிய அந்த நபர் காரை பதர்ப்பூர் எல்லை வழியாக டெல்லிக்கு கொண்டு வந்ததாகவும் நேற்று மாலை 3 மணிநேரம் செங்கோட்டை அருகே உள்ள பூங்காவில் நிறுத்திவைக்கப்பட்டு அதன்பின் மாலை 6.30 மணி அளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சிக்னல் அருகே காரை கொண்டுவந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி செங்கோட்டை பகுதிக்கு வருவதற்கு முன்னதாக ஓல்டு டெல்லி ரயில் நிலையத்தில் தனது உறவினர்களை இறக்கிவிட்டு அதன்பின் செங்கோட்டைக்கு உமர் வந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தாரிக், உமர், அமீர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகிறது டெல்லி காவல்துறை. இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆர்டிஎக்ஸ் பயன்பாடு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆய்வை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.






