--- --:--:-- --

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

2

கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்தில் மூன்று பேரை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.  மதுரையைச் சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர் கோவையில் உள்ள கலைக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்துள்ளார்.

 

ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், இவர் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்ற நிலையில், விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருத்தாவன் நகர் பகுதியில் காரை நிறுத்தியுள்ளனர். இரவு 11 மணியளவில் காரை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த மூன்று பேர், அவர்களை வெளியே வர கூறியுள்ளனர். அந்த கும்பலின் நடவடிக்கையால் அஞ்சிய மாணவியும், அவரின் நண்பரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். தொடர்ந்து மிரட்டிய மர்ம நபர்கள், காரை தடுத்து நிறுத்தி கண்ணாடியை உடைத்துள்ளனர்.

 

அச்சத்துடன் ஆண் நண்பர் வெளியே வந்ததும் அவரின் தலையில் கொடுவாள் மூலம் தாக்கியுள்ளனர். தலையில், பலத்த அடிபட்டதும் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டு மாணவி உயிர் பயத்தில் அஞ்சி நடுங்கியுள்ளார்.உடனே, கத்தி முனையில் மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக புதர் பகுதிக்குள் தூக்கிச் சென்ற மர்ம நபர்கள், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக் கூறப்படுகிறது.

 

நள்ளிரவு 2 மணியளவில் மயக்கம் தெளிந்த ஆண் நண்பர், அவசர உதவி எண்ணுக்கு அழைத்து நடந்ததை விவரித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஆண் நண்பரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதர் மண்டிய பகுதியில் சல்லடை போட்டு தேடியதில், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாணவி அலங்கோல நிலையில் கிடந்ததை கண்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

ஆடையின்றி பரிதவித்த அப்பாவி பெண், அங்கிருந்து வெளியேற முடியாமல் அதிகாலை 4 மணி வரையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்துள்ளார். பின்னர், பாதுகாப்பாக அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீசார், ஏழு தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

 

சம்பவம் நிகழ்ந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்நிலையில், துடியலூர் வெள்ளக்கிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே சம்பந்தப்பட்ட தவசி, கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகியோர் பதுங்கி இருப்பது காவல் துறையினருக்கு தெரியவந்தது. அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

 

இதில் காவலர் சந்திரசேகரின் இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது.உடனே மூவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். அப்போது, பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். தவசிக்கு ஒரு காலிலும், கருப்பசாமி, காளீஸ்வரன் சகோதரர்களுக்கு இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்த நிலையில் அங்கேயே சரிந்து விழுந்தனர்.

 

குண்டு பாய்ந்து காயமடைந்த அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, பிடிபட்ட மூவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இருகூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகியோர் சகோதர்கள் என்பது, மூவர் மீதும் கொலை, வழிப்பறி, அடிதடி என பல்வேறு வழக்குகள் பதிவாகி இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் நள்ளிரவு நேரத்தில் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon