நவ. 6 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்!
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தவும், பரப்புரைகளை மேற்கொள்ளவும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக வரும் 6 ஆம் தேதி மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெகவின் பரப்புரை கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து, மூத்த அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார். இச்சூழலில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தவும், பரப்புரைகளை மேற்கொள்ளவும் நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக வரும் 6-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மூத்த அமைச்சர்கள் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





