வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு
தமிழ்நாட்டிற்கு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாளை (4ஆம் தேதி) முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை இந்தப் பணி நடைபெற இருக்கிறது. இதற்கு தமிழ்நாட்டில், பாஜக, அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை எதிர்த்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் சீராய்வு செய்வதை ஏற்க முடியாது.
பிகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி குளறுபடி தொடர்பான வழக்கில் இறுதி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் வாக்காளர் தீவிர திருத்தம் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் காலகட்டத்தில் பண்டிகைகள் வருவதால் சிரமம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





