நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்!
கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. கடந்த மாதம் 27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்சதீமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேசமயம், கரூர் நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உயர்நீதிமன்றம் அமைத்தது. இந்த சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு தடைகோரி தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை நாளை (அக்.13) வழங்கவுள்ளது. இதனிடையே கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வரும் 17-ம் தேதி தவெக தலைவர் விஜய், கரூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






