--- --:--:-- --

காவலர்களால் தாய் கண் முன் மகளுக்கு நடந்த அதிர்ச்சி..!

3

ந்திராவில் இருந்து தாயுடன் திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை காவலர்கள் இருவர், பைக்கில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மினி வேனில் வாழைத்தார் ஏற்றி வந்த உறவினரிடம், நாங்களும் வருகிறோம்! கோயிலுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி தாய் மகள் இருவர் லிப்ட் கேட்டு வந்துள்ளனர்.

 

திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச் சாலை அருகே வந்து கொண்டிருந்த போது நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சுரேஷ், சுந்தர் ஆகிய இருவர் வேனை வழிமறித்துள்ளனர். வண்டியை சோதனை செய்த போது, இரவு நேரம் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஓட்டுநர் முழித்துள்ளார். அப்போது வேனிலிருந்த தாய், மகள் இருவரையும் கீழே இறங்குங்கள் சந்தேகமாக உள்ளது என்று கூறி காவலர்கள் மிரட்டி உள்ளனர். தாங்கள் ஆந்திராவிலிருந்து அண்ணாமலையாரை பார்க்க ஊர்க்காரரிடம் லிப்ட் கேட்டு வருகிறோம் எனக் கூறி உள்ளனர்.

 

அதை கேட்டதும் குறுக்கு புத்தியில் யோசித்த காவலர்கள் இருவரும், நாங்களே உங்களைக் கோயிலில் இறக்கி விடுகிறோம் எனக் கூறி தனித்தனியாக பைக்கில் அமர வைத்து புறப்பட்டுள்ளனர்.
ஆனால், திருவண்ணாமலை நோக்கி செல்லாமல் விழுப்புரம் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அழைத்து சென்றவர்கள், இருட்டான இடத்தில் திடீரென்று தாயை மட்டும் சாலையோர பள்ளத்தில் தள்ளிவிட்டு மகளை கடத்தி உள்ளனர்.

 

கண் எதிரே பெற்ற மகளைக் காவலர்கள் பைக்கில் கடத்தி சென்றதைப் பார்த்து தாய் துடிதுடித்துப் போனார். மகளை எதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கத்தி கதறி கூச்சலிட்டுள்ளார். பாவம் அப்பகுதியில் யாரும் உதவ ஆள் இல்லை. வக்கிர புத்தியுடன் பைக்கில் வேகமாக சென்ற காவலர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு இளம்பெண்ணைத் தூக்கிச் சென்று இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

பின்னர் அங்கிருந்து விடியற்காலை 4 மணிக்கு இளம்பெண்ணை அழைத்து வந்து சாலையில் இறக்கி விட்டு தப்பித்துள்ளனர். பின்னர் என்ன செய்வது என்றே தெரியாமல்.. அம்மா அம்மா என அழுது கொண்டே நடந்த பெண் சாலையில் சென்றவர்களிடம் உதவி கேட்டு, அருகே உள்ள செங்கல் சூளைக்கு சென்றுள்ளார்.

 

அங்கிருந்தவர்கள் என்ன நடந்தது? என கேட்டுக்கொண்டிருக்கும் போதே பெண்ணின் தாயும் அங்கு ஓடி வந்துள்ளார். மகளுக்கு நேர்ந்த கதியை கண்டு நெஞ்சம் உடைந்தவர் துடிதுடித்து அழுதுள்ளார். உடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்த செங்கல் சூளை ஊழியர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

காவலர்கள் இருவர் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையை அலற விட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் நேரடியாக விசாரணையில் இறங்கினர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், வக்கிர புத்தியை காட்டிய காவலர்கள் சுரேஷ், சுந்தர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

 

இதற்கிடையே, ஆந்திர பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி சுதாகர் உத்தரவிட்டுள்ளார். தொடர் விசாரணை நீடித்து வரும் நிலையில் இச்சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

Right Menu Icon