கரூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!
கரூரில் நடிகர் விஜய்யின் தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவே பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் வந்ததாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இங்கு நடந்தது குறித்து எந்த அரசியல் விமர்சனமும் செய்யவோ அல்லது விசாரணை குறித்துப் பேசவோ வரவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நேற்று முன்தினம் (செப்டம்பர் 27) கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலை அடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் இன்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நெரிசல் ஏற்பட்ட பகுதியில் சிதறிக் கிடந்த காலணிகள் உள்ளிட்ட தடயங்களை அவர்கள் பார்வையிட்டனர்.
பின்னர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, நெரிசலால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 வயது சிறுவன் கிருத்திக் உள்ளிட்டோரின் குடும்பத்தினரைச் சந்தித்து மத்திய அமைச்சர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியதாகவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக இரங்கல் தெரிவித்ததாகவும் கூறினார்.
“பிரதமர் மோடி நேற்று இரவு உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தினார். அவரே வரவேண்டும் என்று நினைத்தார்.
ஆனால், அவரால் வர முடியவில்லை. நேற்று இரவு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர், என்னையும் இணை அமைச்சர் எல்.முருகனையும் அழைத்து கரூக்கு உடனடியாகச் செல்லுமாறு தெரிவித்து அனுப்பி வைத்துள்ளார்.” சம்பவ இடத்தில் மாநில அரசின் செயல்பாடு குறித்தோ அல்லது விசாரணை ஆணையம் குறித்தோ கேட்க வரவில்லை என்று நிதியமைச்சர் தெளிவுபடுத்தினார்.
“நாங்கள் மத்திய அரசின் பிரதிநிதியாக வந்துள்ளோம். நான் இங்கே வந்தது மாநில அரசு என்ன செய்தது? விசாரணை ஆணையம் என்ன சொல்கிறது? என்று பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அல்ல. பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து வருமாறு பிரதமர் மோடி சொன்னார். அதற்காக வந்துள்ளோம். ஆறுதல் கூறத்தான் வந்தோம். இதில் வேற எதுவும் ஒன்றும் இல்லை.”
உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், “அவர்களுக்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்குத் துயரமாக இருந்தது,” என்றும் நிதியமைச்சர் வேதனை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தன்னிடம் சொன்ன கருத்துகளைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்குத் தெரிவிக்க உள்ளதாகவும், பிரதமர் அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “இது போன்ற சம்பவம் இனி நாட்டில் எங்கும் நடைபெறக் கூடாது. மிகவும் பரிதாபமான நிலைமை” என்று அவர் வலியுறுத்தினார்.






