கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்வு..!
கரூரில் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ள தவெக தலைவர் விஜய் 3ஆவது கட்டமாக நேற்று முன் தினம் நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
நாமக்கல் நிகழ்வை முடித்து கொண்டு இரவு 7 மணி அளவில் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு விஜய் வந்தார். விஜயை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் மயங்கிய நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒன்பது குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திருமணமாகாத கவின் என்பவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதேபோன்று, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற பெண்மணியும் இன்று அதிகாலையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இதன் மூலம் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரூரில் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து கொண்டிருந்த போது, விஜய் திருச்சி வழியாக தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
அதே நேரத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி வழியாக கரூர் சென்றார். அதிகாலை 3.15 மணிக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.






