மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 17 கடைசி நாள்!
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு அக்டோபர் 17 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கான மாலைநேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவர்கள், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றவர்கள் ஆகியோர் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்பதாரரே தேர்ந்தெடுத்த தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வருக்கு அக்டோபர் 17-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.






