இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வரும் சனிக்கிழமை வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. அந்தவகையில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது.
குறிப்பாக தாம்பரம், சேலையூர், வண்டலூர், முடிச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதேபோல, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
ஈரோட்டில் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், பவானி, சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. வீரப்பன்சத்திரம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கியது. அதேபோல தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் மழை பெய்தது. இதனால் குளிமையான சூழல் உருவானது.
முன்னதாக வங்கக்கடலில் அடுத்தடுத்து இரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, வங்கக்கடல் பகுதியில் நாளையும், வடக்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் வெள்ளிக்கிழமையும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வரும் சனிக்கிழமை வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல அதிகபட்ச வெப்பநிலை 91 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.






