--- --:--:-- --

இன்று திமுகவின் முப்பெரும் விழா..!

3

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்களையும், முக்கிய தலைவர்களின் பங்களிப்புகளையும் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும். 75 ஆண்டுகளைக் கடந்து நடைபோட்டு வரும் திமுக-வை, 1949-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17ஆம் தேதி பேரறிஞர் அண்ணா தோற்றுவித்தார்.

 

தொடக்கத்தில், தனது ஆசானான பெரியாரைப் போற்றும் வகையில் கட்சிக்குத் தலைவரை அண்ணா நியமிக்கவில்லை. பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகள் மட்டுமே இருந்தன. அதுவரை தேர்தலில் போட்டியிடாமல் இருந்த திமுக, 1957 ஆம் ஆண்டில் ஒரு அரசியல் கட்சியாகத் தேர்தலில் களமிறங்கியது. முதல் தேர்தலிலேயே 15 சட்டமன்ற தொகுதிகளிலும், 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

 

படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்த திமுக, 1967-ல் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆட்சி அமைத்தது. கட்சியின் 18 ஆண்டுகால வளர்ச்சிக்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. அண்ணா முதல்வரானார். 1969-ல் அண்ணாவின் மறைவுக்குப் பின், கட்சியின் தலைவராக மு.கருணாநிதி பொறுப்பேற்றார்.

 

•1974-ம் ஆண்டு தி.மு.க.வின் வெள்ளி விழா ஆண்டைக் குறிக்கும் வகையில், முப்பெரும் விழாவை கருணாநிதி அறிமுகப்படுத்தினார்.
பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், மற்றும் தி.மு.க. தொடங்கிய நாள் ஆகிய மூன்று முக்கிய நாட்களை ஒருங்கிணைத்துக் கொண்டாடப்பட்டது. இந்த முதல் முப்பெரும் விழா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. அப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்தது.
•1985-இல் முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் பெயர்களில் விருதுகளை வழங்க கருணாநிதி திட்டமிட்டார்.

 

1999-ல் தி.மு.க.வின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது மு.கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலும் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

 

2018-ல் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முப்பெரும் விழாவில் பேராசிரியர் அன்பழகன் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டது.

 

2024-ல் தி.மு.க.வின் பவள விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டது.

2024 அக்டோபர் 21-ல் மறைந்த முரசொலி செல்வம் படத்திறப்பு விழாவில் முரசொலி செல்வம் பெயரில் மூத்த பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

 

அதன்படி, இந்த ஆண்டு அந்த விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படுகிறது. தி.மு.க.வின் வெள்ளி விழா ஆண்டான 1974, பொன் விழா ஆண்டான 1999, மற்றும் பவள விழா ஆண்டான 2024 ஆகிய மூன்று முக்கிய மைல்கற்களிலும் கட்சி ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கரூரில் இன்று மாலை நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறும் நிலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon