தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு சென்னை உட்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 16 மாவட்டங்களுக்கு மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை உட்பட 21 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, விருகம்பாக்கம், மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, நெற்குன்றம், போரூர் உள்ளிட்ட இடங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.





