--- --:--:-- --

முதல் கோணல்..திருச்சியில் தவெக பிரசாரத்தில் குளறுபடி..விஜய் வருகையால் பொதுமக்கள் அவதி!

5

திருச்சியில் ஒரு திருப்புமுனையை உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்போடு பிரசாரத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மைக் கோளாறுகள் உள்ளிட்ட பல குளறுபடிகளால் ரொம்பவே அப்செட் ஆனார். ‘முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிடுமோ’னு தவெகவினர் மனசுக்குள்ள வருத்தப்பட்டாங்க. வழக்கம் போலவே, பிரசாரத்தில் திமுகவை ரொம்பவும் கடுமையா விமர்சிச்சார். ஆனா, தவெக தொண்டர்களோட அட்டகாசம், வியாபாரிகள், ஆபீஸ் போறவங்கன்னு திருச்சி மக்களுக்கு பெரும் கஷ்டத்தைக் கொடுத்தது.

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாசம்தான் இருக்கு. அதிமுக, திமுக, தேமுதிகன்னு எல்லா பெரிய கட்சிகளும் இப்போதே தீவிரமா பிரசாரத்தை ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, தவெக தலைவர் விஜய், ரெண்டு மாநாடுகளை மட்டும் நடத்திட்டு அமைதியா இருந்தார். இப்போ ஒரு வழியா பனையூர்ல இருந்து வெளிய வந்து, திருச்சியில பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்.
சனிக்கிழமை காலை 9.40 மணிக்கு தனி விமானத்துல சென்னையில இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார் விஜய். அவரைக் பார்க்குறதுக்காக ரசிகர்கள், தவெக தொண்டர்கள்னு ஆயிரக்கணக்கானோர் அங்கே திரண்டாங்க. போலீசார் எவ்வளவு தடுத்தும், அவங்க விஐபி லாஞ்ச் பக்கத்துல போகக் கூடாதுன்னு 500 மீட்டர் தள்ளி நிறுத்தினாலும், யாரும் அதைக் கண்டுக்கவே இல்ல.
விஐபி லாஞ்சில இருந்து வெளிய வந்த விஜய், தொண்டர்களைப் பார்த்து கையசைச்ச வேகத்தோடயே, அவருக்காக காத்திருந்த ஸ்பெஷல் வண்டியில ஏறிக்கிட்டார். ஆனா, ரசிகர்கள் அவரைப் பார்க்குற ஆர்வத்துல தடுப்புகளை உடைச்சுக்கிட்டு ஓடுனாங்க. அந்த இடமே ஒரு போர்க்களம் மாதிரி பரபரப்பா மாறிடுச்சு. இந்த கூட்ட நெரிசலால திருச்சி விமான நிலையத்துக்குள்ள ஒரு மணி நேரத்துக்கு மேல ட்ராஃபிக் ஜாம் ஆகி, உள்ளேயும் வெளியேயும் போக முடியாம பயணிகள் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.
அப்புறமா விஜயோட பிரசார வண்டி புறப்பட்டது. நூற்றுக்கணக்கான தொண்டர்கள் விஜயோட வண்டியை பின்னாடியே பின்தொடர ஆரம்பிச்சாங்க. முன்னாலயும் பின்னாலயும் வண்டிகள்லயும் நடந்தும் வந்ததால, விஜயோட வண்டி வேகமா போக முடியாம ரொம்ப மெதுவா ஊர்ந்து நகர்ந்தது.
விஜய்யை பார்க்கணும்னு ஆர்வத்துல, காலை 8 மணிக்கே தவெகவினர் மரக்கடை மார்க்கெட் பகுதியில குவிஞ்சுட்டாங்க. ஆட்டம் பாட்டம்ன்னு ரொம்ப உற்சாகமா இருந்தாங்க. விமான நிலையத்துல இருந்து விஜய் வர்றதுக்கு ரொம்ப நேரமானதால, பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள்ல சிலர், தண்ணி கூட இல்லாம மயக்கம் போட்டு விழுந்தாங்க.
திருச்சி மரக்கடை பகுதியில காலை 10.30 மணிக்கு பிரசாரம் செய்யத்தான் போலீஸ் அனுமதி கொடுத்திருந்தது. ஆனா, சுமார் 5 மணி நேரம் பயணம் பண்ணதுக்கு அப்புறம், மதியம் 3 மணி அளவுல தான் மரக்கடைப் பகுதிக்கு வந்தார் விஜய். அப்புறம் வண்டி மேல ஏறி பேச ஆரம்பிச்சார்.
விஜய் தன்னோட பேச்சில், “அந்த காலத்துல போருக்கு போறதுக்கு முன்னாடி குலதெய்வத்தை வேண்டிக்கிட்டு போவாங்களாம். அதே மாதிரி, ஜனநாயகப் போரான தேர்தலுக்குப் போறதுக்கு முன்னாடி உங்கள் எல்லாரையும் பார்த்துட்டு போகலாம்னு வந்திருக்கேன்”னு சொன்னார்.
“சில மண்ணை தொட்டா ரொம்ப நல்லதுன்னு பெரியவங்க சொல்வாங்க. அதே மாதிரி திருச்சியில் ஆரம்பிச்ச எல்லாமே திருப்புமுனைன்னு சொல்வாங்க. அறிஞர் அண்ணா முதல் முறையா தேர்தல்ல நிக்கணும்னு நினைச்சது திருச்சியிலதான். எம்.ஜி.ஆர். தன்னோட முதல் மாநில மாநாட்டை நடத்துனது திருச்சிலதான். பெரியார் வாழ்ந்த இடம். மதச்சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பேருபோன இடம். திருச்சிக்கு வந்து உங்களையெல்லாம் பார்த்ததும் எனக்குள்ள ஒரு பரவசம் ஏற்பட்டுருக்கு”ன்னு உள்ளூர் மக்களைப் புகழ்ந்து பேசினார் விஜய்.
திருச்சியை ஒரு திருப்புமுனைன்னு சொன்ன விஜய், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதத பத்தியும், திருச்சிக்கு அறிவிச்சு செயல்படுத்தப்படாத திட்டங்கள் பத்தியும் கேள்வி எழுப்பினார். அப்பதான், அவர் கையில இருந்த மைக்கில் கோளாறு ஏற்பட்டது. அதனால, அவர் என்ன பேசறார்னு கூட்டத்துல இருந்தவங்களுக்குப் புரியாம சத்தம் போட்டாங்க.
சுத்தி நின்னுக்கிட்டு இருந்த தொண்டர்களோட ஆர்ப்பாட்டம், மைக் கோளாறுன்னு பல காரணங்களால கூட்டத்துல இருந்தவங்களால விஜயோட பேச்சைக் கேட்கவே முடியல. அதே மாதிரி டிவிகள்ல வந்த நேரலைலயும் விஜயோட ஆடியோ கேட்கவே இல்ல.
ஆனாலும் வேற வழியில்லாம, விஜய் பேசினார். அப்போது பாஜக கொஞ்சம் விமர்சனம் செஞ்சுட்டு,  திமுகவை ஒரு பிடி பிடித்தார். திமுகவோட தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு, “சொன்னீங்களே செஞ்சீங்களா… 505 வாக்குறுதிகள் கொடுத்தீங்களே, எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினீங்க?”னு காரசாரமா கேள்வி கேட்டார் விஜய்.
அப்படியே உள்ளூர் பாலிடிக்ஸ் பத்தியும் விஜய் கையில் எடுத்தார். “இப்போ ஒரு பெரிய மோசடி நடந்துக்கிட்டு இருக்கு. அதுதான் கிட்னி திருட்டு. ஏழை மக்கள்கிட்ட பணத்தைக் காட்டி இந்த மோசடி நடந்து வருது. அது எங்க நடக்குது தெரியுமா? திமுக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான ஆஸ்பத்திரியில நடக்குது. அதை கேட்டா, திருட்டு இல்லனு சொல்றாங்க”னு வேசமாக பொங்கினார்.
“பெண்களுக்கு மாசம் ஆயிரம் ரூபாய் கொடுக்குறீங்க. ஆனா, அதையும் எல்லாருக்கும் கொடுக்காம, ‘ஆயிரம் கொடுத்துட்டோம், கொடுத்துட்டோம்’னு சொல்லியே காட்டிட்டு இருக்கீங்க. பஸ்ல இலவச டிக்கெட் கொடுத்துட்டு, ‘ஓசில போறீங்க ஓசில போறீங்க’ன்னு அசிங்கப்படுத்துறீங்க… அதுக்கு நீங்க கொடுக்காமலே இருந்திருக்கலாமே?”ன்னு காட்டமா விஜய் கேட்டார்.
ஆளுங்கட்சியை சாடிய பின்னால், தவெக தேர்தலில் ஜெயிச்சா என்னென்னலாம் செய்யும்னு சொன்னார். “அதை செய்றோம், இதை செய்றோம்னு பொய் வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். எது உண்மையோ, எது சாத்தியமோ அதை மட்டும் தான் கொடுப்போம். சட்டம், கல்வி, ரேசன், மருத்துவம், சாலை வசதி, மின்சாரம்னு அடிப்படை வசதிகள்ல எந்த சமரசமும் கிடையாது. அதே மாதிரி பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குலயும் எந்த சமரசமும் கிடையாது”னு சொன்னார் விஜய்.
மைக் சரியா வேலை செய்யாததால, திருச்சி மரக்கடை மார்க்கெட்ல பேச்சை முடிச்சுக்கிட்டார் தவெக தலைவர். கிட்டத்தட்ட 30 நிமிஷம் பேசலாம்னு பிளான் போட்டிருந்த நிலையில், 10 நிமிஷத்துக்குள்ளயே தன்னோட பேச்சை முடிச்சுக்கிட்டார்.
“திருப்புமுனை தரும்”னு சொல்லிட்டு முடிச்ச பிறகு மைக் வேலை செய்யாம போனது, முதல் பிரசாரத்திலேயே இந்த மாதிரி குளறுபடி நடந்ததுன்னு சென்டிமெண்டா விஜய்க்கு என்னவோ போல ஆகிடுச்சு. அதே மாதிரி, ரசிகர்கள் மனசுலதான் கூட்டம் கூடுதே தவிர, அரசியல் தொண்டர்களுக்கு தேவையான ஒழுங்கு தவெகவினர் கிட்ட இல்லன்னு விஜய் ரொம்ப வருத்தப்பட்டாராம்.
ரொம்ப பெரிய எதிர்பார்ப்புகளோட நடந்த இந்த பிரசாரம், மக்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், பல குழப்பங்களால அந்த ஆர்வம் கொஞ்சம் குறைஞ்சுபோச்சு. ஒரு பக்கம் ஒரு நடிகரோட மக்கள் செல்வாக்கு வெளிப்பட்டதுன்னா, இன்னொரு பக்கம் ஒரு புதுக் கட்சியோட அனுபவமின்மை வெளிப்படையா தெரிஞ்சது.
பிரசாரத்துக்காக வண்டியில புறப்பட்ட விஜய், மரக்கடை பகுதிக்கு வர்றதுக்குள்ள ஏற்பட்ட கடுமையான ட்ராஃபிக் ஜாம், பொதுமக்களுக்கு பெரிய கஷ்டத்தைக் கொடுத்தது. எட்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவே நாலு மணி நேரத்துக்கு மேல ஆச்சு. இது, பிரசாரத்துக்கான வழி, வண்டிகளை நிறுத்துற இடம், மக்கள் கூட்டத்தை சமாளிக்கிறதுன்னு எதுலயுமே தவெக சரியா திட்டமிடலன்னு காட்டுது.
அரசியல் பொதுக்கூட்டங்கள்ல மைக், ஒலி அமைப்புலாம் ரொம்ப முக்கியம். ஆனா, விஜயோட பேச்சுல மைக் வேலை செய்யாம போனது, தவெகவோட முதல் பெரிய பலவீனமா தெரிஞ்சது. ஒரு புதுக் கட்சி, தன்னோட தலைவர் பேசும்போது இப்படி ஒரு டெக்னிக்கல் கோளாறு வந்தா, அதுக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை வச்சிருக்கணும்.
வேலைக்கு போறவங்க, அவசர தேவைக்கு வெளிய வந்தவங்க, வியாபாரிகள்னு பல தரப்பு மக்களும் இந்த ட்ராஃபிக் ஜாம்னால ரொம்ப கஷ்டப்பட்டாங்க. ஒரு கட்சி தன்னோட முதல் பிரசாரத்துலயே இப்படி பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துனா, அது அவங்களுக்கு எதிரான ஒரு மனநிலையை உருவாக்கும் அபாயம் இருக்கு. அரசியல் கட்சிகள், தங்களோட பிரசாரத்தால மக்களுக்கு வர்ற கஷ்டங்களை குறைக்கிறதுக்கு பொறுப்புடன் செயல்படணும். ஆனா, இந்த பிரசாரத்துல அது நடக்கலன்னு சொல்றது வருத்தமான விஷயம்.
விஜய் அரசியல் களத்துல முதல் அடி எடுத்து வச்ச இந்த பிரசாரப் பயணம், முதல் கோணலாக போச்சு. இதை வெற்றிப் பயணம்னு சொல்றதைவிட ஒரு பாடப் பயணமாத்தான் பார்க்கப்படுது. மக்களோட வரவேற்பு பெரிய அளவுல இருந்தாலும், களப்பணிகள்ல நடந்த குளறுபடிகள், கட்சியோட முதல் அடியை தடுமாற வச்சுடுச்சு. இனி வர்ற நாட்கள்ல, தவெக இந்த அனுபவமின்மையில இருந்து பாடம் கத்துக்கிட்டு, அடுத்தடுத்த பிரசாரங்களை ரொம்ப திறமையா திட்டமிடுவாங்கன்னு எதிர்பார்க்கலாம். ஒரு கட்சி ஜெயிக்கிறது அதோட தலைவரோட மக்கள் செல்வாக்கால மட்டும் இல்ல, களப்பணிகள்ல அதோட நிர்வாகத் திறனாலயும் தான்.
Right Menu Icon