--- --:--:-- --

விஜய்க்கு குடைச்சல்..திருச்சி பிரசாரத்திறு அனுமதி தர அலைக்கழிப்பு.. திமுகவின் நெருக்கடியால் தவெக புது வியூகம்!

1

வெக தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், தவெக தரப்பில் அனுமதி கோரிய இடங்களில் பிரசாரத்தை செய்ய காவல் துறையினர் திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். இதன் பின்னணியில் திமுக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள தவெக, மாற்றுத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தினார். அதன் பின்னர் கோவை மற்றும் மதுரையில் தவெக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தையும் பிரம்மாண்ட மாநாடு போல விஜய் நடத்தி இருந்தார்.  எனினும் விஜய் பற்றிய பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் தனது பனையூர் அலுவலகத்தில் இருந்து மட்டுமே அரசியல் செய்கிறார்.
வெளியே வருவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தரக்கூட, அவர்களை தனது அலுவலகத்திற்கு வரச் செய்கிறார். ஒர்க் ஃபிரம் ஹோம் மாதிரி அரசியல் செய்தால், மக்களின் வாக்குகளை எப்படி கவர முடியும் என்று, தவெகவினர் புலம்பும் நிலை உள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 7 மாதங்களே உள்ள நிலையில், இனியும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்தால், மற்ற அரசியல் கட்சிகள் களத்தில் முந்திவிடுவார்கள் என்று கருதிய விஜய், செப்டம்பர் முதல் மக்களை சந்திக்கப் போகிறேன் என்று அறிவித்தார். அதன்படி, முதல்கட்டமாக, செப்டம்பர் 13இல் திருச்சியில் தொடங்கி, டிசம்பர் 20ஆம் தேதி மதுரையில் பிரசாரத்தை நிறைவு செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.
திருச்சி எப்போதுமே திருப்பம் தரும்; திராவிடக் கட்சிகளுக்கு திருச்சி கைகொடுத்துள்ளது  என்று சென்ட்டிமென்ட் கருதி விஜயும் தனது முதல் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்க முடிவு செய்தார். ஆனால், இங்குதான் வில்லங்கம் முளைத்தது.
விஜய் பிரசாரத்திற்கு காவல் துறையினர் அனுமதிக்காக தவெகவினர் காவல் துறையினரிடம் மனு அளித்தால், வேண்டுமென்றே அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. திங்கட்கிழமை அன்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு நிர்வாகிகளுடன் சென்றார். அங்கு ஆணையர் காமினியை நேரில் சந்தித்து திருச்சி மாநகரத்தில் மரக்கடை, காந்தி மார்க்கெட், பால்பண்ணை, சென்னை புறவழிச்சாலை வரை ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்தார்.
ஆனால், “திருச்சி மாநகரம் ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது; எனவே திருச்சி நகருக்குள் ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி தரப்படாது” என்று ஆணையர் தரப்பில் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் ஏமாற்றம் அடைந்தார். பின்னர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்யவாவது அனுமதி தரும்படி கோரினர்.
ஆனால், போலீசார் அதற்கும் சம்மதிக்கவில்லை. திருச்சி நகர எல்லையில் மொத்தம் 45 இடங்களில் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி தரப்படுவது வழக்கம். அந்த பட்டியலில் சத்திரம் பேருந்து நிலையம் இல்லை; எனவே அனுமதி கிடையாது என்று மீண்டும் மறுத்தனர்.
இதனால், தவெகவினர் மிகவும் அப்செட் ஆகியுள்ளனர். மாற்று வியூகமாக, திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அல்லது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்புறம் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கோரி மனு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு போலீஸார் என்ன விளக்கம் தரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
வரும் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் பிரசாரம் என்று விஜய் நாள் குறித்துவிட்ட நிலையில், காவல் துறை தரப்பு வேண்டுமென்றே அனுமதி தருவதில் இழுத்தடிப்பு செய்வதாக, தவெக  நிர்வாகிகள் புலம்புகின்றனர். இதன் பின்னணியில் ஆளும் திமுகவின் அழுத்தம் இருப்பதாக தவெகவினர் கொந்தளிக்கின்றனர்.
இதேபோல், வரும் 13ஆம் தேதி திருச்சிக்கு வரும் விஜய்க்கு ஓட்டல்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசியல் நெருக்கடி, பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி, விஜய்க்கு திருச்சியில் உள்ள பிரபல ஓட்டல்கள் அறைகள் ஒதுக்க மறுத்துவிட்டன. இதனால், சென்னையில் இருந்து அதிகாலையில் கிளம்பி திருச்சி வரும் விஜய், மீண்டும் பிரச்சாரத்தை முடித்து இரவு சென்னை திரும்புவற்கு ஏதுவாக பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்உ உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து தவெகவினர் கூறுகையில், விஜயின் தவெக பிரசாரத்துக்கும் நெருக்கடி தருவதில் இருந்து, அவரை பார்த்து திமுக எந்தளவுக்கு பயந்து போயுள்ளது என்று தெரிகிறது. அதிகாரம் கொண்டு அடக்க நினைத்தது அன்றைய ஆளும் அரசு. அந்த அதிகார சக்திகளின் ஆட்டத்திற்கு அடுத்தத் தேர்தலிலேயே முடிவுரை எழுதினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அதேபோல், விஜயும் திமுகவுக்கு முடிவுரை எழுதுவார் என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆதவ் அர்ஜுனாவும், போலீஸார் அனுமதி மறுத்து அலைக்கழிப்பதாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இன்று எங்கள் தலைவரும் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையுமான த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் சுற்றுப்பயணத்தை தடுக்கும் நோக்கில் தங்கள் அதிகார பலத்தைக் கொண்டு காவல்துறையின் மூலம் நெருக்கடி கொடுக்க முனைகிறது இன்றைய தி.மு.க அரசு. மக்கள் தலைவராக விஜய் அவர்களுக்கு இருக்கும் பேராதரவை பொறுத்துக்கொள்ள முடியாத அச்சத்தின் வெளிப்பாடாகவே அரசின் இந்த அதிகார அழுத்தத்தை பார்க்க வேண்டியுள்ளது.
ஜனநாயக நாட்டில் எந்தத் தலைவரும் மக்களை சந்திப்பதை எப்பேர்ப்பட்ட அதிகார சக்தியாலும் தடுக்க முடியாது. அப்படி தடுக்க நினைத்த அதிகார சக்திகளை மக்களே தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் பாடம். மக்களே மகத்தான ஆசான்கள்”  என்று தவெகவின் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இன்னொரு புறம், மனு கொடுக்க வந்தபோது கோயிலில் வழிபாடு நடத்திய புஸ்ஸி ஆனந்த் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  போலீஸார் எச்சரித்தும் அதிக கூட்டங்களை கூட்டியதாக புஸ்ஸி ஆனந்த் மீது  வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ், ” தவெக மதுரை மாநாட்டின் மிகப்பெரிய வெற்றியால் மிரட்சி அடைந்துள்ள ஆளுங்கட்சி, தன் பயத்தையும், இயலாமையையும் வெவ்வேறு வகைகளில் வெளிக்காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உங்களைப்போல் ஆள் பிடித்துக் கூட்டம் காட்டும் தேவை எங்களுக்கு இல்லை; தமிழக வெற்றிக் கழக நிகழ்வு என்றாலே தன்னெழுச்சியாக இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இதுதான் தவெக-வுக்கும் மற்ற கட்சிகளுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு”  என்று அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
அதிகாரம் கையில் இருப்பதால், போலீஸார் மூலம் ஆளுங்கட்சி ஒருபுறம் அழுத்தம் தந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும் அதை அனைத்தையும் சட்டபூர்வமாக எதிர்கொள்ள தவெக தலைவர் விஜய் ஆயத்தமாகி இருக்கிறார். அந்த வகையில், தொடங்குவதற்கு முன்பாக விஜயின் திருச்சி பிரசாரம், பேசுபொருளாகி இருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர்.
Right Menu Icon