யாரையும் சந்திக்கவில்லை மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் – செங்கோட்டையன்
பாஜக தலைவர்களை சந்திப்பதற்காக டெல்லி செல்லவில்லை என கோவையில் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதற்கு அடுத்த நாளே, அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் உட்பட செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை ஈபிஎஸ் பறித்தார்.
செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் சுமார் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்தனர். மேலும், செங்கோட்டையனுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், திடீர் பயணமாக கோவை விமானநிலையத்தில் இருந்து செங்கோட்டையன் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டார். முன்னதாக டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்ல இருப்பதாகக் கூறினார். கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கும் செங்கோட்டையன் பதிலளித்தார். கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதால் தனக்கு தொண்டர்கள் ஆறுதல் தெரிவித்துவிட்டு சென்றதாகவும் செங்கோட்டையன் கூறினார்.
நியாயமான கோரிக்கை என்பதால் பலரும் தன்னை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் யாராவது பேசினார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன் “நோ கமெண்ட்ஸ்” என்றார்.






