--- --:--:-- --

மதுரை மாநாட்டில் தவெக-வின் புதிய பாடல் வெளியீடு!

2

த.வெ.க. மதுரை மாநாட்டில் அக்கட்சியின் இரண்டாவது பாடல் வெளியிடப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணி ஆற்றுகின்றன.

 

2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரம்மாண்டமாக நடக்கிறது.

 

மதுரை மக்கள் விஜய்யின் இந்த சந்திப்பை ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளனர். மாநாட்டை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

அந்த வகையில் 3 மணிக்கு விஜய் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வர திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, நடந்து வரும் விஜய்யைப் பார்க்க, தற்பொழுதே, ரேம்ப் வாக் பகுதியில் இடம் பிடித்து காத்துக் கொண்டிருக்கின்றனர் தொண்டர்கள்.

 

இதன் பிறகு தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் 4 மணியளவிலும், அதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுவதாக தெரிகிறது. இதையடுத்து 5 மணியளவில் விஜய் தனது உரையைத் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த மாநாட்டிற்கும் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

இதற்கிடையே, தவெக மதுரை மாநாட்டில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற தீமில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய தீம் பாடல் இன்று வெளியிடப்படுகிறது. தவெக கொடிப்பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இந்தப் பாடலுக்கும் இசையமைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 1967, 1977 ஆகிய இரண்டு ஆண்டுகளில் திமுக, அதிமுக வெற்றி பெற்றதை முன்னிலைப்படுத்தி 2026-ல் அதுபோன்ற சூழல் ஏற்படும் என்று விஜய் கூறி வருகிறார்.

 

அதனை மையப்படுத்தி மதுரை மாநாட்டு நுழைவு வாயிலில், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்று குறிப்பிட்டு முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். படங்களுக்கு நடுவில் தவெக தலைவர் விஜய் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதே பெயரில் பாடல் வெளியாகவிருக்கிறது. இன்று வெளியிடப்படும் இந்தப் பாடலில் விஜயின் பேச்சை ஒட்டிய வரிகள் பாடலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon