--- --:--:-- --

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மிக கனமழை..?

2.1

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

 

சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, குமணன்சாவடி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், வண்டலூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், வேளச்சேரி சாலை, முடிச்சூர் சாலை, ஜிஎஸ்டி சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர்.

 

தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசிய நிலையில், வண்டலூர் அருகே வாலாஜாபாத் பிரதான சாலையில் இருந்த ராட்சத பேனர் கிழிந்து காற்றில் பறந்தது. மழை காரணமாக பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலை நகர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.இதேபோல, திருவள்ளூர் மற்றும் திருப்பாச்சூர், பாண்டூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது.

 

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிபட்டி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்துவாங்கியது.இந்நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் மிதமான மழை நீடிக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon