4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களிலும், கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 26-ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வெயில் மிதமான அளவிலேயே இருக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. இதனிடையே ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
ஆற்காடு, வாலாஜாபேட்டை, கலவை, திமிரி, விஷாரம், சோளிங்கர், நெமிலி, பனப்பாக்கம் ஆகிய இடங்களில் காற்றுடன் மழை பெய்தது. இதனால், அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, கன்னிகாபுரம், பச்சகுப்பம், தேவலாபுரம், துத்திப்பட்டு, சோலூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பத்தில் 1 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால், நேதாஜி சாலை, அண்ணா நகரில் மழைநீர் தேங்கியது.






