காமராஜர் குறித்த சர்ச்சைக்குரிய விவாதங்கள் பொதுவெளியில் நடப்பது சரியல்ல – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை பெரம்பூரில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா பங்கேற்றார்.
அப்போது காமராஜர் குறித்து அவர் கூறியது சர்ச்சையாகியது .
திருச்சி சிவாவின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் காமராஜர் குறித்து பொதுவெளியில் நடைபெறும் சர்ச்சைக்குரிய விவாதங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.
“கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்கள்!” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதிவில், காமராஜருடன் திராவிட இயக்கத் தலைவர்கள் கொண்டிருந்த நெருங்கிய மற்றும் மரியாதையான உறவை நினைவுகூர்ந்துள்ளார். அதில், பெருந்தலைவர் காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார்.
குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் “உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!” என்று முதல்வர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




