அகமதாபாத் விமான விபத்து : உயிர் தப்பியவர் கூறிய திக்திக் நிமிடங்கள்
ஒரு அற்புதம் என்று சொல்லுமளவுக்கு, வியாழக்கிழமை நடந்த பயங்கரமான விமான விபத்தில் ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். உயிர் பிழைத்த ஒரே நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகன் விஸ்வாஸ் குமார் ரமேஷ் (39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அகமதாபாத் காவல் ஆணையர் ஞானேந்தர் சிங் மாலிக், ’11A’ இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் பயணி விபத்தில் உயிர் பிழைத்ததை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார். குஜராத் அரசு வட்டாரங்கள், “தற்போது ஒரு உயிர் பிழைத்தவர் பற்றிய தகவல் மட்டுமே உள்ளது” என்று தெரிவித்தன.
மாலை அகமதாபாத் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒருவர் உயிர் பிழைத்ததை உறுதிப்படுத்தி, அவரை மருத்துவமனையில் சந்தித்ததாகக் கூறினார். “நல்ல செய்தி என்னவென்றால், ஒருவர் விபத்தில் உயிர் பிழைத்துள்ளார், அவரைச் சந்தித்த பிறகு நான் இங்கு வந்துள்ளேன்,” என்று அவர் தெரிவித்தார்.
“விமானம் புறப்பட்ட முப்பது வினாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. அனைத்தும் மிக வேகமாக நடந்தது… நான் எழுந்தபோது, என்னைச் சுற்றி உடல்கள் கிடந்தன. நான் பயந்து போனேன். நான் எழுந்து ஓடினேன். என்னைச் சுற்றி விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்தன. யாரோ ஒருவர் என்னைப் பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்,” என்று ரமேஷ் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





