--- --:--:-- --

கடைசி நிமிடத்தில் Mayday call எனக் கூறிய விமானி..!

3

குஜராத்தின் அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 40 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 12 விமான பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

 

அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் விமானம் விழுந்து நொறுங்கியதில் கரும்புகை வெளியேறி வருகிறது. விமான விபத்தைத் தொடர்ந்து, ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அகமதாபாத்தில் இருந்து விமானம் லண்டன் புறப்பட்டுச் சென்ற நிலையில், புறப்பட்ட 10 நிமிடங்களில் விமானம் விழுந்து நொறுங்கியது.

 

மதியம் 1.39 விமானம் புறப்பட்ட நிலையில், 10 நிமிடங்களில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் தீ பற்றிக் கரும்புகை வெளியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 வகையைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது. 625 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த நிலையில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

 

இதற்கிடையே, விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து இதுவரை உயிரிழந்த நிலையில் 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு கடைசி நொடியில் விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு ‘மேடே அழைப்பு’ (Mayday Call) விடுத்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

 

விமானப் பயணங்களின்போது ஒருபோதும் கேட்கக் கூடாத வார்த்தை என்று சொல்லப்படுவதுதான் ‘மேடே கால்’ அல்லது ‘மேடே அழைப்பு’. ஏனென்றால், அவசர காலத்தில் உதவிக்காக விமானங்களின் விமானிகள் பயன்படுத்தி வரும் ரகசிய வார்த்தைதான் இது.அதன்படி, இன்ஜின் முழுமையாக செயலிழப்பு அல்லது விமானத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை போன்ற உயிருக்கே ஆபத்தான மிகவும் அவசர காலத்தில் விமானிகள் இந்த ‘மேடே கால்’ வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

 

‘m’aidez’ என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து இந்த மேடே என்ற வார்த்தை உருவானது. இந்த வார்த்தையின் பொருள் ‘உதவி செய்யுங்கள்’ என்பதுதான்.விமானிகளால் கணிக்க முடியாத பெரிய ஆபத்து ஏற்படும் அவசர சூழல் என்றால், இந்த வார்த்தையைக் கண்டிப்பாக மூன்று முறை கூற வேண்டும் என்று விமானிகள் கடைப்பிடிக்கும் விதி.

 

அதனால், தான் விமானப் பயணத்தில் இந்த வார்த்தையைக் கேட்கக்கூடாது எனக் கூறுவார்கள். இந்த வார்த்தையைத்தான் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகும் முன் கடைசி நொடியில் விமானி விமானக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புக் கொண்டு கூறியிருக்கிறார். ஆனால், கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமணியை தொடர்புகொள்ளும் முன்னதாகவே விமானம் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து , விமானக் கட்டுப்பாடு அறை உடனடி உதவிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.

Right Menu Icon