--- --:--:-- --

வார்த்தைகளால் விவரிக்க முடியாதபடி இதயம் நொறுங்கியது : பிரதமர் மோடி

4

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர். விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதுவரை 130 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரமான விபத்து என்பதால் உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி விபத்து பற்றி எக்ஸ் பக்கத்தில், “அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.

 

இந்த விபத்து, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது நினைவுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்தது மனதை உடைக்கும் பேரழிவு என்று குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த தேசம் துணை நிற்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

 

Right Menu Icon