8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு..!
தமிழ்நாட்டில் வியாழக்கிழமை அன்று 8 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவானது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் பாதிப்பு, இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே தொடங்கி விட்டது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானது.
இதனால், பகல் நேரத்தில் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையான அவதிக்கு உள்ளாகினர். இதற்கு அடுத்தபடியாக திருப்பத்தூர், கரூர் பரமத்தியில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. சென்னை, சேலம், ஈரோட்டில் 101 டிகிரி பாரன்ஹீட்டும், திருத்தணி, திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பநிலை மக்களை வாட்டி வதைத்தது. கோடைகாலம் உக்கிரமாகியுள்ள நிலையில், பல இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
இதே வெப்பநிலை தொடரும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.இதற்கிடையே, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றும், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.






