தெலங்கானாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து..!
இரண்டு மாடி கட்டடத்தின் மேல் மேலும் 4 மாடிகளை கட்ட முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், கட்டிடத் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம், பத்ராச்சலம் நகரின் பஞ்சாயத்து ராஜ் அலுவலகம் அருகே 2 மாடி கட்டடம் ஒன்று இருந்தது.
அந்தக் கட்டடத்தின் மீது மேலும் 4 மாடிகளை கட்ட உரிமையாளர் திட்டமிட்ட நிலையில், அதற்கான கட்டுமானப் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பழைய கட்டடம் என்பதால் புதிய கட்டுமானப் பணியால் மேலும் வலுவிழந்து சரசரவென சரிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் 7 பேர் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.இடிபாடுகள் அப்புறப்படுத்தப்பட்டு நீண்ட முயற்சிக்குப் பிறகு, தொழிலாளர்கள் 7 பேரையும் உயிரற்ற சடலமாகவே மீட்க முடிந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





