அதிமுக ஆட்சிக் காலத்தைவிட தற்போது குற்றச் சம்பவங்கள் குறைவு..!
தமிழ்நாட்டில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சிக் காலத்தைவிட தற்போது குற்றச் சம்பவங்கள் குறைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேரமில்லாத நேரத்தின் போது, சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தரப்பில் அவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று அவைத்தலைவர் கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட நிலையில், முக்கியமான பிரச்னை என சொல்வதால், எதிர்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதியுங்கள் என்று முதலமைச்சர் சபாநாயகரிடம் தெரிவித்தார்.அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று மட்டுமே 4 கொலைகள் நடந்திருப்பதாகவும், மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், சம்பவத்தைக் கூறி, அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டுமே தவிர, பொதுவாக குற்றம் சாட்டுவது சரியாக வராது என்றார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதில் அளிக்கத் தொடங்கியதும், அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.அப்போது பேசிய முதலமைச்சர், தைரியம் இருந்தால், தான் சொல்வதை கேட்டுவிட்டுச் செல்ல வேண்டும் எனக்கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நேற்று நடைபெற்றதாக ஈபிஎஸ் முன்வைத்த குற்றச்சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
குறிப்பாக, கோவை சம்பவம் தற்கொலை என்றும், சிவகங்கையில் குடும்பத் தகராறு காரணமாக நடந்த கொலை என்றும் கூறினார். இதே போன்று, ஈரோடு கொலை சம்பவம் குறித்து முதலமைச்சர் விரிவாக விளக்கம் அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




