--- --:--:-- --

திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு இணைந்து நடத்திய நொய்யல் பொங்கல் திருவிழா..!

12

திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய நொய்யல் பொங்கல் திருவிழா 2025 திருப்பூர், வளம் ரோடு, யுனிவர்சல் தியேட்டர் அருகில் உள்ள நொய்யல் நதிக்கரையில் 2 வது நாளாக நடந்தது.

 

தமிழர்களின் பண்பாட்டில் சிறந்த சகோதர, சகோதரிகள் ஒற்றுமையுணர்வு மேம்படவும், நாடு செழித்து மக்கள் வளம் பெறவும், பண்டைய காலத்தின் மரபுப்படி பொங்கல் சீர் கொடுத்து வாழ்வு செழிக்கவும், மத ஒற்றுமை ஓங்கிடவும், சகோதரத்துவம் மேலோங்கிட நடந்த இந்த விழாவானது மாலை 4 மணிக்கு சமத்துவ பொங்கல் படைத்து இறைவழிபாட்டுடன் நடந்தது.

தொடர்ந்து மக்களிசை பாடல்கள் நிகழ்ச்சியும், திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சியும் நடந்தது.
இதனைத் தொடர்ந்து கவிநயா நாட்டிய குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. பின்னர் பின்னர் சாதனையாளரும் 12-ஆம் வகுப்பு மாணவியுமான டிரம்ஸ் சலோனியின் டிரம்ஸ் நிகழ்ச்சியும், வி 2 பி குழுவினரின் போட்டியிசை நிகழ்ச்சியும் நடந்தது.

 

தொடர்ந்து பத்மஸ்ரீ விருது பெற்ற கும்மி நடன பயிற்றுனர் பத்தரப்பன் மற்றும் தமிழக அரசின் கலை மாமணி விருது பெற்ற கலைஞர்களை பாராட்டி, சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது : “தமிழர்கள் இசையோடு பின்னிப் பிணைந்தவர்கள். தமிழகத்தில் தண்ணீர் தேக்கி வைக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளாக இருந்தாலும், துக்க நிகழ்வுகளாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக இசை இடம் பெறும். அந்த அளவிற்கு தமிழர்கள் இசையை நேசிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.

 

இதனால் தமிழ்நாடு அரசும் நாட்டுப் புற கலைஞர்களையும், இசை கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கலைமாமணி விருதுகளுக்கான கலைஞர்களை தேர்ந்தெடுக்க நடுவர்களை நியமனம் செய்துள்ளது. விரைவில் இசை, நாட்டுப்புற கலைஞர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

 

இன்று பொங்கல் விழா கொண்டாடக்கூடிய காஞ்சி மா நதி எனப்படும் நொய்யல் நதியில் 20 ஆண்டுக்குப் பிறகு உப்புத்தன்மை குறைந்து இருப்பதன் காரணமாக, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் நடவடிக்கையால் ஒரத்துப்பாளையத்தில் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் எந்த ஒரு மாசு பொருட்களையும் நொய்யல் ஆற்றில் சேர்க்காமல் நொய்யல் ஆற்றை பாதுகாப்போம் என்ற வேண்டுகோளையும் உங்கள் முன்வைக்கிறேன். திமுக ஆட்சியில் தான் திருப்பூர் மாநகராட்சியாகவும், மாவட்டமாகவும் உருவாக்கப்பட்டது. அதே போல் கடந்த 2006 முதல் 2021 வரை திமுக ஆட்சியில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.200 கோடி மதிப்பில் நவீனப்படுத்தப் பட்டது.

 

இவ்வாறு அமைச்சர் பேசினார். மாவட்ட கலெக்டர் கிருஸ்துராஜ் தலைமையில் நடந்த இந்த விழாவில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், எம்.எல்.ஏ. செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவர்கள் பத்மனாபன்,
உமா மகேஸ்வரி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு தலைவர் ஜீவானந்தம், செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் திருப்பதி மற்றும் அதன் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Right Menu Icon