தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்கு கனமழை?
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கையை தாண்டி ராமேஸ்வரம், தூத்துக்குடி அருகே மன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டுள்ளது. இதனால் தான் நேற்றிரவு முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் நகர்ந்து டெல்டா மற்றும் தென் தமிழகம் வழியாக அரபிக்கடலுக்கு செல்கிறது. இதனால், இன்றும், நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று இரவுவரை விட்டுவிட்டு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இன்று டெல்டா பகுதிகளில் கனமழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடல் நோக்கி நகரும் என்பதால் தென் தமிழகத்தில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மன்னார் வளைகுடா வழியாக செல்வதால் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, தேனி, மதுரை ஆகிய பகுதிகளில் இன்றிரவு முதல் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையே, இன்று காலை 8 மணி நிலவரப்படி, மழை மேகங்கள் சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர பகுதிகளிலும் டெல்டா மற்றும் திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் நீடித்து வருகிறது.
இதனால் சென்னை உட்பட வட தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. ஆனால், மழை மேகங்கள் படிப்படியாக நகர்ந்து உள்மாவட்டங்களுக்கு செல்லும் என்பதால் இன்று இரவுக்குள்ளாகவே தென் மாவட்டங்களுக்கு மழை மேகங்கள் செல்லக்கூடும் என்பதால், நாளை டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் அதிகம் இருக்கும்.
அதேவேளையில் நாளை சென்னையில் மழையின் தாக்கம் வெகுவாக குறைந்துவிடும். இதற்கிடையே, சென்னையில் இன்று மாலை வரை விட்டு விட்டு கனமழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடாவை நெருங்குவதால், 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். கொடைக்கானல், மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




