பூண்டி அம்மாபாளையம் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் தீபாவளி விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு செயல் விளக்க நிகழ்ச்சி..!
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியின் (எஸ்.எம்.சி ) எனும் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அவிநாசி கிளை சார்பில் தீபாவளி விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு செயல் விளக்க நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளரும், பள்ளி தலைமை ஆசிரியருமான ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எஸ்.எம்.சி உறுப்பினர் சஃபியுல்லா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை உத்தரவின்பேரில், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன் மேற்பார்வையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அவிநாசி நிலைய அதிகாரி நவீந்திரன் தலைமையில் சேகரன், நிரேஷ், மாரியப்பன் கோபாலகிருஷ்ணன், மாரிச்சாமி ஆகியோர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் குழுவினர் பள்ளிக்கு வந்து பல்வேறு தீத்தடுப்பு நிகழ்ச்சியினை செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்.
தீபாவளி நெருங்கி வருவதால் மாணவர்கள், குழந்தைகள் பட்டாசு வெடித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது நாம் பட்டாசு வெடிக்கும் பொழுது செய்யக்கூடியவை, செய்யக்கூடாது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது . அதேபோல் மழை, வெள்ளம், இயற்கை சீற்றம், வெள்ள அபாயம் ஏற்படும் போது நாம் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வீடுகளில் சமையல் செய்ய பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவது எப்படி? அதனால் தீ விபத்து ஏற்பட்டால் உடனே நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? தீ விபத்துகளை நாமே எவ்வாறு தடுத்துக் கொள்வது? கெமிக்கல், பெட்ரோல் மூலம் தீவிபத்து ஏற்பட்டால் ஈரத்துணிகளை கொண்டு எப்படி அணைப்பது? போன்ற நிகழ்வுகள் குறித்து செயல் விளக்கத்துடன் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்.
தொடர்ந்து அவிநாசி நிலைய அதிகாரி நவீந்திரன் பேசுகையில் மாணவர்கள் கஷ்டப்பட்டு வளர்க்கும் பெற்றோர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தற்போது முதியோர் இல்லங்கள் ஏற்பட்டு வருவது வருத்தம் தரக்கூடியதாக உள்ளது. அடிக்கடி செல்போன் பார்ப்பதால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு பார்வையற்றவராக மாறிவிடும் சூழ்நிலை ஏற்படும்.

நாங்கள் எல்லோரும் அரசு பள்ளியில் படித்து தான் முன்னேறி வந்துள்ளோம். அரசு, மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதனை பயன்படுத்தி நாம் நல்ல நிலைக்கு முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறினார். முடிவில் பட்டதாரி ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வளர்மதி, ராமலிங்கம், விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 1 வது வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் 750 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். பின்னர் அனைவருக்கும் பட்டாசு வெடித்தல் தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




