நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அட்டவணை
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 21 ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இதனை அறிவித்துள்ளார். அதன்படி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இம்மாதம் 30 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 1 என அறிவித்துள்ளார். இரு தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும் அதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 24ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சுனில் அரோரா தெரிவித்துள்ளார் .
நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக எம்எல்ஏ ராதாமணி உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி நகரின் காமராஜ் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24 எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.






